Skip to main content

கார் வியாபாரத்தில் 12 லட்சம் மோசடி! ஒருவர் கைது... மற்றொருவருக்கு வலைவீச்சு!  

Published on 20/09/2020 | Edited on 20/09/2020
incident in cuddalore

 

கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் பரக்கத் தெருவில் வசிக்கும் முகமதுசாதிக் என்பவரது மகன் முகமது பாருக்(46) என்பவர் கடந்த 22.05.2020 அன்று கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஒரு புகார் அளித்தார்.  அந்த புகாரில், ' நான் 18 ஆண்டுகள் குவைத் நாட்டில் டிரைவராக வேலை செய்து விட்டு ஊர் வந்தேன். என்னிடம் எங்கள் ஊர் பெருமாள் தெருவை சேர்ந்த சேர்ந்த அஷ்ரப் அலி என்பவரின் மகன் முகமது ஆஷிக் என்பவர் கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் என்னை சந்தித்து தானும், பாண்டிச்சேரி சண்முகாபுரம் சோனியா காந்தி நகரை சேர்ந்த தண்டபாணி மகன் அருண்பிரசாத் என்பவரும் கார் வாங்கி விற்கும் தொழில் செய்வதாகவும் , அதில் நல்ல லாபம் கிடைப்பதாகவும், அவர்களுடன் இணைந்து தொழில் செய்தால் எனக்கு 50% சதவீதம் லாபம் கொடுப்பதாகவும் கூறி என்னை 12,22,000 (பன்னிரெண்டு லட்சத்து இருபத்திரண்டாயிரம்) முதலீடு செய்ய வைத்து, அதன் மூலம் முகமது ஆஷிக் 9 கார்களை வாங்கி என்னுடைய வீட்டில் விட்டார்.

பின்பு முகமது ஆஷிக் மற்றும் அருண்பிரசாத் ஆகியோர் கார்களை பாண்டியில் வைத்து விற்றால் அதிக விலைக்கு விற்கலாம் என்று கூறி 9 கார்களையும் பாண்டிச்சேரி எடுத்துச் சென்று கார்களை விற்றுவிட்டு பணத்தை எனக்கு கொடுக்காமல் ஏமாற்றிவிட்டனர். நான் பணத்தை கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.

 

incident in cuddalore


அந்த புகாரின் பேரில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்திரவின்பேரிலும்,  கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்  கணகேசன் மேற்பார்வையிலும்,  கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் ஈஸ்வரி(பொறுப்பு) பரிந்துரையின் பேரில் கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் அன்பழகன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து நேற்று (18.9.2020) மேல்பட்டாம்பாக்கம் பெருமாள்கோவில் தெருவிலிருந்த முகமது ஆஷிக்கை அவரது வீட்டில் வைத்து உதவி ஆய்வாளர்கள் அன்பழகன், விக்ரமன், சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்ரமணி, தலைமை காவலர் ரமேஷ் ஆகியோர் கைது செய்து சிறையிலடைத்தனர். தலைமறைவாக உள்ள அருண்பிரசாத்தை தேடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்