![incident in Chennai Rajeev Gandhi hospital](http://image.nakkheeran.in/cdn/farfuture/Bko3XglS6cn-pr6X0AXmPdKbIkHfqjEvkRkjLiRkUzI/1620830008/sites/default/files/inline-images/34_42.jpg)
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை காரணமாக நாளுக்கு நாள் வைரஸ் பாதிப்பும், உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 10-ஆம் தேதி காலை 04.00 மணி முதல் மே 24ஆம் தேதி காலை 04.00 மணிவரை 15 நாட்களுக்குத் தமிழகத்தில் இந்த ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் ஒரே நாளில் 30,355 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இன்று சென்னையில் ஒரே நாளில் 7,564 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 19,508 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் 293 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 16,471 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் படுக்கை வசதிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாகச் சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் சுமார் 90 விழுக்காட்டிற்கும் மேலான படுக்கைகள் நிரம்பியுள்ளன. இதனால், வைரஸ் பாதிப்புக்கு ஆளானோர் பல இடங்களில் ஆம்புலன்சிலேயே காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காத காரணத்தால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முன்பு இன்று ஆம்புலன்சில் காலையிலிருந்து காத்திருந்த 6 கரோனா நோயாளிகள் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் ஆறு பேருக்கும் சிகிச்சையளிக்க மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாததால், மருத்துவமனைக்கு வெளியே காலையிலிருந்து ஆம்புலன்ஸில் வைக்கப்பட்ட இவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.