திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊராட்சி வன்னியநாதபுரம் பகுதியில் அரிவேல் என்பவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் ஏற்கனவே அவர் ஒரு ஆழ்துளை கிணறு அமைத்து அதன் மூலமாக நீர் எடுத்து தனது வயலில் நெல் பயிரிட்டு வந்துள்ளார். நீர் குறைவாக இருந்த சமயத்தில் கால்நடைகளுக்கான தீவனம் பயிரிட்டுள்ளார்.
அந்த ஆள்துளை கிணறு பழுதாகியுள்ளது, நீர் மோட்டாரை வெளியே எடுக்க முயலும் போது கயிறு அறுந்து மோட்டார் உள்ளே விழுந்துள்ளது. அதனை வெளியே எடுத்து பழுது பார்க்க நரியம்பட்டு கிராமத்தை சேர்ந்த மேத்யூ என்பவருடைய பழுது பார்க்கும் இயந்திரத்தை வரவைத்துள்ளார்.
![thirupathur](http://image.nakkheeran.in/cdn/farfuture/X5kJbzzyCLoo9Yqv-VdWrr-QgC0N4-_4kpDrbh0AKrI/1582691180/sites/default/files/inline-images/tytytuytu.jpg)
அவர்களும் வந்து கிணற்றுக்குள் விழுந்து நீர்மோட்டாரை மேலே கொண்டு வரும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். அவர்கள் பணி செய்துக்கொண்டு இருந்த இடத்துக்கு மேலே உயர் மின் கம்பி சென்றுக்கொண்டு இருந்தது. அதன்மீது வாகனத்தின் கம்பம் உரசியதால் மின்சாரம் தாக்கி, பணி செய்துக்கொண்டுயிருந்த மேத்யூ அவரது மகன் சஞ்சய் மற்றும் ஊழியர் சந்தோஷ் தூக்கி வீசப்பட்டனர்.
![thirupathur](http://image.nakkheeran.in/cdn/farfuture/F_qGdaeSbBdOFhafDXKjsuqiqs75Q_Jg0sQPmtCqgyM/1582691211/sites/default/files/inline-images/fgfgfhg.jpg)
அங்கிருந்த மக்கள் அலறியடித்து ஓடிச்சென்று கீழே விழுந்தவர்களை தூக்கியபோது, சம்பவயிடத்திலேயே மின்சாரம் தாக்கி மேத்யூ உயிரிழந்துள்ளார். மேத்யூ மகன் சஞ்சய் மற்றும் ஊழியர் சந்தோஷ் ஆகியோர் மயக்கமடைந்துள்ளனர். படுகாயம் அடைந்த அவர்களை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
இதுகுறித்து உமராபாத் போலீசார்க்கு தகவல் சொல்லப்பட்டது, அவர்கள் வந்து புகார் வாங்கி வழக்குப்பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுக்குறித்து நில உரிமையாளரிடம் விசாரணை நடத்திவருகிறது காவல்துறை.