நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
அதில், தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையே, தமிழக அரசு, தமிழகத்தில் நடைபெறும் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 ஆம் தேதி அன்று பொது விடுமுறை அளிப்பதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், இந்த மக்களவைத் தேர்தல் பணிகளில் பெரும்பாலான ஆசிரியர்கள் ஈடுப்படுத்தப்பட இருக்கிறார்கள். இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள 4ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 19ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விடுமுறை நாட்களில் அறிவிக்கப்பட்டிருந்த தேர்வுகள் ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.