தென்காசி மாவட்டத்தின் பாவூர்சத்திரம் அருகே உள்ளது கல்லூரணி ஊராட்சி. இதற்குட்பட்ட சின்னத்தம்பி நாடார்பட்டி கிராமத்திலிருக்கும் ஸ்ரீ சக்திபோத்தி சுடலைமாடசாமி கோவிலில் கொடைவிழா வருடம் தோறும் ஆடி மாதத்தின்போது நடைபெறுவது வழக்கம். அது சமயம் கிராம மக்கள் திரண்டு வந்து வழிபடுவார்கள். வழக்கம் போல் இந்த வருட ஆடி மாத கொடைவிழா கடந்த 23, 24 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் கொடைவிழாவாக நடந்திருக்கிறது.
அன்றைய தினம் கொடைவிழாவில் வழக்கம் போல் நள்ளிரவு நேரத்தில் சாமியாடிகள் சாமக்கொடையான கோவிலுக்கு வெளியே வேட்டைக்குச் சென்றவர்கள், காட்டுப்பக்கம் உள்ள ஏதோ ஒரு பொருளை எடுத்துக் கொண்டு ஆடியபடி திரும்பியிருக்கின்றனர். இந்தக் காட்சியை சிலர் செல்ஃபோனில் படம் பிடித்து வெளியிட அது வைரலாகி இருக்கிறது. அதே சமயம் இந்தக் காட்சிகள் கேரளாவிலுள்ள அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் பரபரப்பாக வெளியிடப்பட்டதாக தெரிகிறது. இந்தத் தகவல் வெளியேற, இதையடுத்து கிராமக் கொடை விழாவில் விதியை மீறி நடந்ததாக கல்லூரணி வி.ஏ.ஓ. விநாயகம், பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார். அதனடிப்படையில் விசாரணை செய்த போலீசார் கரோனா ஊரடங்கு தடை உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், கொடை விழாவிற்கான முன் அனுமதியை காவல் துறையினரிடமிருந்து பெறாமல் விழா நடத்தியதாக கிராம நிர்வாகிகள் மற்றும் சாமியாடிகள் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து பாவூர்சத்திரம் காவல் துறை போலீசாரைத் தொடர்புகொண்ட போது முன் அனுமதியின்றி ஊரடங்கு விதியை மீறி கொடைவிழா நடத்தியதன் காரணமாக விழா நடத்திய நிர்வாகிகள் சாமியாடிகள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று முடித்துக் கொண்டனர்.