தமிழகத்தில் தொடர்ந்து கரோனா இரண்டாம் அலை பரவி வருகிறது. நேற்று 21,228 பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 6,228 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து 6,000க்கும் அதிகமான கரோனா தொற்று பதிவாகி வருகிறது. பிற மாவட்டங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து இருந்துவருகிறது. நேற்றைய பாதிப்புகளையும் சேர்த்து தமிழகம் முழுவதும் இதுவரை 12,49,292 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் சிகிச்சை பெற்று குணமானவர்களின் எண்ணிக்கை 19,112 ஆக உள்ளது.
தொடர்ந்து கரோனா பரவி வரும் நிலையில் அரசின் சார்பில் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு போன்றவையும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் எனத் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், ''தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். கரோனாவிற்கு போதிய சிகிச்சையின்றி நாள் தோறும் பல உயிர்கள் பலியாகி வருவது அதிர்ச்சியைத் தருகிறது. மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் கரோனா தடுப்பூசியை அனைவருக்கும் செலுத்த வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.