இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 07/03/2022 அன்று மீண்டும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையைத் தொடங்கியது. சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அப்பல்லோ மருத்துவர்கள் குறுக்கு விசாரணைக்கு ஆஜராகியிருந்தனர். அப்பல்லோ மருத்துவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார்.
அதனைத் தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மார்ச் 21ஆம் தேதி ஆணையத்தில் ஆஜராகும்படி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. அதேபோல் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசியும் மார்ச் 21ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் முதன்முறையாக சசிகலாவின் அண்ணன் மகள் இளவரசி ஆஜராகியுள்ளார். இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா, விவேக் ஜெயராமன் ஆகியோர் ஏற்கனவே ஆணையத்தின் விசாரணைக்கு ஆஜராகி இருந்தனர். எட்டுமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ஓபிஎஸ் இன்று ஆஜராகியுள்ளார். இன்றைய விசாரணைக்குப் பிறகு ஜெயலலிதாவுக்குச் சிகிச்சை அளித்த வெளிநாட்டு மருத்துவர் ரிச்சர்ட் பீலே, அப்போலோ மருத்துவமனையின் தலைவராக இருக்கும் பிரதாப் சி ரெட்டிக்கும் சம்மன் அனுப்பப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.