தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மர்ம மரணத்கிற்கு தீர்வு காண முடியாத இந்த அதிமுக அரசு மக்களைப் பற்றியா? சிந்திக்கப் போகிறது என்று பிச்சம் பட்டியில் நடந்த திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள பிச்சம்பட்டியில் திமுகவின் ஊராட்சி சபை கூட்டம் நடந்தது. இக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் திமுகவின் துணை பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமி, தேனி மாவட்ட செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன், தேனி பாராளுமன்ற தொகுதி பொருப்பாளர் கருப்பசாமி பாண்டியன், மாநில விவசாய தொழிலாளர் அணி தலைவர் மூக்கையா, மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் செல்வேந்திரன், எம்.எல்.ஏ. அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் எம்.எல்.ஏ க்கள் லட்சுமணன், ஆசையன், மாநில தீர்மானக்குழு இணை செயலர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலையில் நடந்த ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது.... தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும். அப்போது திமுக ஆட்சியில் பொதுமக்களின் குறைகள் தீர்த்து வைக்கப்படும். கல்விக் கடனை ரத்து செய்வதோடு, டாஸ்மாக் கடைகள் மூடப்படும். குடி தண்ணீர் வசதி, சாலை வசதி, கழிப்பறை, கல்யாண மண்டபம் ஆகியவை கட்டிக் கொடுக்கப்படும் என்றார்.
மேலும் முல்லைப் பெரியாறு தண்ணீரை இப்பகுதிக்கு கொண்டு வரவும், சக்கிலிச்சி அம்மன் கண்மாய்க்கு குன்னூரில் இருந்து தண்ணீர் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடிமகன் பேரிலும் 15 லட்சம் ரூபாய் வங்கி கணக்கில் போடப்படும் என்று சொன்னார். ஆனால் அதை அவர் சுருட்டிக்கொண்டு உலகத்தை சுற்றி வந்து கொண்டிருக்கிறார். அவருக்கு அடிமைகளாக ஓ.பி.எஸ், இ பி எஸ், தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டுள்ளார்கள். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் சாவில் இருக்கும் மர்மத்தையே கண்டு பிடிக்க முடியாத இபிஎஸ்,ஓ.பி.எஸ் அரசு மக்களை பற்றி சிந்திக்கவா போகிறது, என்று பேசினார்.
இக் கூட்டத்தில் பெண்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்ணீர் விட்டு 100 நாள் வேலையில் மோசடி, பெண்களுக்கு கழிப்பறை இல்லை, குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு, டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், படித்தவர்களுக்கு வேலை வேண்டும், முதியோர் உதவித்தொகை வேண்டும், இதுபோல் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். திமுக ஒன்றிய பொறுப்பாளர் மகாராசன் நன்றி கூறினார்.
முன்னதாக ஆண்டிபட்டிக்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் முருகன் தியேட்டர் முன்பு திமுக கட்சி கொடியை ஏற்றினார். ஒன்றிய பொறுப்பாளர்கள் நகர பொறுப்பாளர்கள் சார்பு அணிகள் பேரூர் செயலாளர்கள் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.