
தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 47வது சென்னை புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த புத்தகக் காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகள் மற்றும் பபாசி விருதுகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வாழ்த்துரையினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படித்தார்.
முதல்வரின் வாழ்த்துரையில், “கலைஞரின் நூற்றாண்டான இந்த ஆண்டு பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியின், உமா மகேசுவரி, தமிழ்மகன், அழகிய பெரியவன், வேலு. சரவணன், மயிலை பாலு ஆகியோர் இந்த ஆண்டுக்கான கலைஞர் பொற்கிழி விருதைப் பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கும் பபாசியின் விருது பெற்றுள்ள பிற படைப்பாளிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள். வாசிப்புப் பழக்கம் என்பது ஒரு தனிமனிதரின் அறிவுத்திறத்தின் அடையாளம் மட்டுமல்ல, ஒரு சமூகம், மாநிலம், நாடு எந்த அளவு வளர்ந்துள்ளது என்பதற்கான அடையாளம். அறிவாற்றலை வாழ்நாளெல்லாம் பெற மனிதருக்குத் துணைநிற்கும் புத்தகங்களைப் போற்றுகின்ற அரசாக நமது திராவிட மாடல் அரசு இருக்கிறது. அதனால்தான் கலைஞர் சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் உருவாக்கினார். நாம் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் உருவாக்கியுள்ளோம். புத்தகங்கள் மேல் எத்தகைய ஆர்வமும், அக்கறையும் கொண்டவர்கள் நாங்கள் என்பதற்கு இது ஒரு சிறிய எடுத்துக்காட்டு.
தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை, எழுத்தாளர்கள் பிறந்தநாளில் கூட்டங்கள், குறைந்த விலையில் சங்க இலக்கிய நூல்கள் வெளியீடு, திராவிடக் களஞ்சியம் உருவாக்கம், ஊடகவியலாளர்களுக்குக் கலைஞர் எழுதுகோல் விருது, உலகப் பல்கலைக்கழகங்களில் செம்மொழித் தமிழ் இருக்கைகள், நூலகங்களுக்குச் சிற்றிதழ்கள், இலக்கிய மாமணி விருதுகள், உயரிய விருது பெற்ற எழுத்தாளர்களுக்குக் கனவு இல்லம், திசைதோறும் திராவிடம், முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம் என்று ஏராளமான தமிழ்க் காப்புத் திட்டங்களை இன்றைய திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு பாடநூல் கல்விக் கழகமும் ஏராளமான புத்தகங்களை வெளியிட்டு விற்பனை களத்தில் உயர்ந்து நிற்கிறது.
புத்தகம் வாசிக்கும் வழக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காகச் சென்னை புத்தகக் காட்சியைப் போல தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் கடந்த ஆண்டு முதல் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அடுத்ததாகத் தமிழ்நாடு அரசு எடுத்த மிக முக்கியமான முயற்சி என்பது பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி. தமிழினம் சிறக்க வேண்டுமானால் தமிழ்மொழி சிறக்க வேண்டும். தமிழ்மொழி செழிக்குமானால் தமிழினம் செழிக்கும். தமிழ்மொழியும் இனமும் செழிக்கப் புத்தகங்கள் துணைநிற்கட்டும். 47 வது சென்னை புத்தகக் காட்சி பெரும் வெற்றி அடையட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.