கடலூர் மாவட்டத்தில் வியாழன் நள்ளிரவு பல்வேறு பகுதிகளில் கஜா புயலின் தாக்கத்தால் பலத்த மழை கொட்டியது. கஜா புயல் முன்தினம் நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதியில் கரையை கடந்தது.
இதனால் கடலூர் மாவட்டத்தில் வியாழன் நள்ளிரவு பலத்த சத்தத்துடன் காற்று வீசியது. சில இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தது. சில இடங்களில் மரங்கள் சாய்தன. கஜா புயலையொட்டி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், வடலூர் நெய்வேலி, காட்டு மன்னார்கோவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் மழை கொட்டியது.
இந்நிலையில் கஜா புயலுக்கு கடலூர் மாவட்டத்தில் 3 பேர் பலியானார்கள். வேப்பூர் அருகே உள்ள மேல்மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். அரவது மனைவி அய்யம்மாள்(32) இவர்கள் குடிசை வீட்டில் தூங்கிகொண்டிருந்தனர்.
நள்ளிரவு நேரத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் அய்யம்மாள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராஜேந்திரன் படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறிஞ்சிப்பாடி பெரு மாத்தூரான் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ஆனந்த்(40), டிரைவர். இவர் நேற்று இரவு பலத்த மழை பெய்துக் கொண்டிருந்த போது வீட்டின் உள்ளே மழை நீர் வந்துவிடுமோ என்ற அச்சத்தில், தனது வீட்டின் அருகே உள்ள வடிகால் வாய்க்காலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்டிருந்தார். அப்போது அவர் வீட்டின் அருகே மின்சார பெட்டி இருந்தது. அதில் வயர் ஒன்று அறுந்து தொங்கிக் கொண்டிருந்தது. அதனை கவனிக்காமல் ஆனந்த் சாக்கடையை அடைப்பை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அறுந்து தொங்கிக்கொண்டிருந்த வயர் திடீரென்று ஆனந்த் மீது உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பண்ருட்டி அருகே நடுகுப்பத்தைச் சேர்ந்த ரங்கநாதன் இவர் என்எல்சி ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிகிறார் அதிகாலையில் பணிக்கு செல்லும்போது சாலையில் விழுந்து கிடந்த மரத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்தவர்கள் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்ட மீனவ கிராமங்களில் படகுகளை பாதுகாப்பாக மீனவர்கள் நிறுத்தி வைத்ததால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை.
சாலையில் விழுந்த மரங்கள் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டது. மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட முகாம்களில் சுமார் 5 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் குறைந்த அளவே தண்ணீர் உள்ளது.
ஆனால் நெய்வேலி சுரங்க நீர் வினாடிக்கு 2ஆயிரம் கன அடி வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீர் வாலாஜா ஏரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து பரவனாறு வழியாக பெருமாள் ஏரிக்கு 2 ஆயிரம் கன அடியும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் பெருமாள் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது ஏரியின் நீர் மட்டம் 6 அடியாக உள்ளது. இதன் முழு கொள்ளளவு 6.5 அடியாகும். வாலாஜா ஏரியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முகாம் இட்டு இதை கண்காணித்து வருகின்றனர். பரங்கிப்பேட்டை அருகே சாமியார்பேட்டையில் மீனவர்கள் வலை உலர்த்தும் கூடத்தின் மேற்கூறை தகடுகள் காற்றில் விழந்தன. பரங்கிப்பேட்டை படற்கரை பகுதியில் கடல்சீற்றம் வெள்ளிக்கிழமை மாலை சீற்றத்துடன் இருந்தது.
இந்தநிலையில் வியாழன் இரவு வடக்குத்து பகுதியில் 146 மிமீயும், குறிஞ்சிப்பாடியில் 128மிமீயும், விருத்தாசலத்தில் 118மிமீயும், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 62.80மிமீயும், பரங்கிப்பேட்டையில் 62மிமீயும், சிதம்பரத்தில் 54.10மிமீயும், புவனகிரியில் 51மிமீயும், காட்டுமன்னார்கோவிலில் 40மிமீயும் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் நெய்வேலி அருகே உள்ள வடக்குத்தில் அதிக அளவில் மழை பெய்துள்ளது. கிள்ளை அருகே சிங்ககாரகுப்பம் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொக்ளின் இயந்திரம் மூலம் வடியசெய்தனர்.