
விதிகளை மீறியதாக உள்ளாட்சி பிரதிநிதிகள்4 பேரைப் பதவி நீக்கம் செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசு செயலாளர் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மாநிலத்தின் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள், அதாவது மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் ஆகியவை 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன.
நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் நிருவாகம் தொடர்பான 1998ஆம் ஆண்டு சட்டத்தின் வகைமுறைகளை மீறும் வகையில் செயல்படும் மேயர்கள், துணை மேயர்கள், மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், மண்டலக்குழுத் தலைவர்கள் மற்றும் மன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள அச்சட்டம் அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. இந்நிலையில், 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் வகைமுறைகளை மீறி செயல்பட்ட நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட 4 பிரதிநிதிகள் மீது அரசு, அச்சட்டத்தின் பிரிவு 52இன் கீழ் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி நடவடிக்கை மேற்கொண்டு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் அவரவர் வகித்துவந்த பதவியிலிருந்து நீக்கம் செய்து ஆணையிட்டுள்ளது.
அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சி 189வது வார்டு உறுப்பினர் வ.பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி 5வது வார்டு உறுப்பினர் கே.பி. சொக்கலிங்கம், தாம்பரம் மாநகராட்சியின் 40வது வார்டு உறுப்பினரும், 3வது மண்டலக்குழுத் தலைவருமான ச. ஜெயபிரதீப் மற்றும் உசிலம்பட்டி நகர்மன்ற தலைவரும், 11வது வார்டு உறுப்பினருமான க.சகுந்தலா ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.