மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் சிதம்பரத்தில் போட்டியிடும் விசிக வேட்பாளர் தொல்.திருமாவளவனை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை எம்.எல்.ஏ.வுமான மு.தமிமுன் அன்சாரி பிரச்சாரம் செய்தார்.
கூட்டத்தில் மக்கள் அதிகளவில் திரண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து திணறியது. காவல்துறையனர் போக்குவரத்தை சீர் செய்தப்படி இருந்தனர். பிரச்சார கூட்டம் சிதம்பரம் மேல வீதியில் நடைப் பெற்றுக் கொண்டிருந்தபோது பிராமண குருக்கள் தலைமையில் சாமி ஊர்வலம் மெதுவாக வந்தது.
அப்போது தமிமுன் அன்சாரி, தனது பேச்சை நிறுத்திவிட்டு, கூட்டத்தினரை பார்த்து, சாமி ஊர்வலத்திற்கு வழிவிட்டு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டார். அங்கு நின்றிருந்த பொதுமக்கள் அவ்வாறே ஒத்துழைப்பு தந்தனர். இது காவல்துறையினரை மகிழ்ச்சியடைய செய்தது.
சாமி ஊர்வலம் கடந்ததும், மீண்டும் அவர் பேச்சை தொடங்கியபோது, அந்த ஊர்வலத்தில் சென்ற ஒரு பிராமண பெரியவர் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரியைப் பார்த்து கையசைத்து நன்றி கூறினார்.
''இதுதான் நாங்கள் விரும்பும் நல்லிணக்கம்'' என்று தமிமுன் அன்சாரி கூறியதும், கூட்டத்தினர் கைத்தட்டி ஆரவாரித்தனர். இதைக் கண்ட பத்திரிக்கையாளர்கள், இது மிகவும் பண்பான அணுகுமுறை என பாராட்டினர்.