தமிழகத்தில் நடைபெறுவது மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி இல்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் குற்றச்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நெய்வேலி இந்திராநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது,
"தமிழகத்தில் நடைபெறுவது மக்கள் தேர்ந்தெடுத்த ஆட்சி இல்லை. எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுத்த ஆட்சி. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு இ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆட்சி நடைபெறுகிறது. இந்த ஆட்சி விரைவில் அகற்றப்பட வேண்டும். ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது தமிழகத்தில் அ.தி.மு.க, தி.மு.க ஆகிய கட்சிகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் காங்கிரஸ் இருந்தது. தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். காங்கிரஸ் கட்சியில் தொண்டர்கள் ஒன்றாக இருக்கின்றார்கள். ஆனால் தலைவர்கள் வேறுபட்டு நிற்கிறார்கள். இந்த நிலை மாறி அனைவரும் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும். தமிழகத்தில் காமராஜர் ஆட்சி விரைவில் அமைய வேண்டும். யார் முதல்-அமைச்சர் என்பது முக்கியமல்ல. தலைவர் ராகுல் இட்ட பணிகளை சிறப்பாக செய்து வருகிறேன். முதல்-அமைச்சராக வேண்டும் என்ற ஆசை, தகுதி எனக்கும் உள்ளது. காங்கிரஸ் நிர்வாகிகள் மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுக்க வேண்டும். மக்கள் பிரச்சனைக்காக அதிகாரிகளை சந்திக்க வேண்டும். கட்சியில் அதிகளவு உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.
மத்திய அரசு கொண்டு வந்த பண மதிப்பு இழப்பு நடவடிக்கையால் ஏழை, நடுத்தர மக்களுக்கு எந்த பயனும் இல்லை. இந்த அரசு ஏழைகளுக்கான அரசு அல்ல. கடந்த நான்கு ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் எந்த வளர்ச்சியும் இல்லை. மத்திய அரசை மாற்ற காங்கிரசால் மட்டுமே முடியும். நாடு முழுவதும் ராகுல் அலை வீசுகிறது. வரும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல் பிரதமராக வருவார்" என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர்,
" உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைத்தது தவறு. உள்ளாட்சிகளில் பிரதிநிதிகள் இல்லாததால் வளர்ச்சிப்பணிகள் நடக்கவில்லை. ஆறு மாதத்திற்கு பிறகு நாடாளுமன்ற தேர்தல் வந்து விடும். உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியாது. எனவே உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். 18 எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் தீர்ப்பு தள்ளி தள்ளி போவதால் அந்த தொகுதிகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒருவேளை சபாநாயகரின் உத்தரவு தவறு என்று நீதிமன்ற தீர்ப்பு வருமானால் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வர வாய்ப்புகள் உள்ளது" என கூறினார்.