வானில் தோன்றும் அதிசய நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரகணம் இன்று (26.12.2019) இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் தோன்றியது.
அமாவாசை அன்று நிலா மறைக்கும் போது சூரியன் நெருப்பு வளையமாக தென்பட்டால், அது வளைய சூரிய கிரகணம் ஆகும். 30 ஆண்டுகளுக்கு பிறகு நெருப்பு வளையத்துடன் சூரிய கிரகணம் தோன்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வெறும் கண்களால் சூரிய கிரகணத்தை பார்க்க கூடாது என்றும் சூரியக் கண்ணாடி வழியாக பார்க்க வேண்டும் என்று அறிவியலாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை வெள்ளை முனியன் கோவில் திடலில் சென்னை அண்ணா அறிவியல் தொழில்நுட்ப மையம் , தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து சூரிய கிரகணத்தை பொதுமக்கள், மாணவர்கள் காணும் வகையில் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இதனைக் காண பொதுமக்கள், மாணவர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். அதைவிட தாத்தாக்களும், பாட்டிகளும் அதிகமானோர் வந்து சூரிய கிரகணத்தை கண்ணாடிகள் மூலம் பார்த்து ரசித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், "எங்க வயசுக்கு இப்ப தான் சூரிய கிரகணத்தை நேரடியா பார்க்கிறோம். அந்த காலத்தில் சூரியனை பாம்பு முழுங்குதுனு சொல்லி பார்க்க விட மாட்டாங்க... சாப்பிட விடமாட்டாங்க. ஆனா இப்ப நேரடியா பார்த்துட்டோம் " என்றனர்.