தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று சந்திப்பு மேற்கொண்டார். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''1980ல் இருந்து 87 வரை பலகட்ட போராட்டங்களை ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்கம் நடத்தியது. நூற்றுக்கணக்கான நபர்கள் உயிர்த் தியாகம் செய்தார்கள். அவர்கள் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதன் பிறகுதான் 1989இல் திமுக ஆட்சிக் காலத்தில் 20 விழுக்காடு எம்பிசி என உருவாக்கினார்கள். இப்பொழுது எங்களுடைய கோரிக்கை உள் ஒதுக்கீடு கொடுங்கள். எம்.பி.சியில் வன்னியர்களுக்கு சரியான பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. போராடியது உயிர்நீத்தது எல்லாம் வன்னியர் சமுதாயம். இதை ஒரு ஜாதி பிரச்சனையாக பார்க்கக் கூடாது. இது சமூகநீதிப் பிரச்சனை. தமிழ்நாட்டில் தனிப்பெரும் சமுதாயம், மிகப்பெரிய சமுதாயம் வன்னியர் சமுதாயம்.
இந்த சமுதாயம் வளர்ந்தால் தமிழ்நாடு வளர்ச்சி பெறும். இந்த சமுதாயம் கிட்டத்தட்ட வட மாவட்டங்களில் 20 மாவட்டங்களில் இருக்கிறது. கடந்த 30 ஆண்டு காலமாக கல்வியில் பத்தாவது, பதினொன்றாவது, பன்னிரண்டாவது தேர்வில் கடைசி 15 மாவட்டத்தில் எங்கள் வட மாவட்டங்கள் இருக்கிறது. இது கான்ஸ்டண்டாக இருக்கிறது. ஏதோ ஒரு வருடம் இரண்டு வருடம் அல்ல, 30 ஆண்டுகளாக கல்வியில் கடைசி 15 மாவட்டங்களில் வட மாவட்டங்கள் இருக்கிறது. தமிழ்நாட்டில் அதிகம் குடிசைகள் உள்ள மாவட்டங்கள் வட மாவட்டங்கள்; தமிழ்நாட்டில் அதிக வேலைவாய்ப்பு இல்லாத மாவட்டங்கள்; அதிகம் மது விற்பனை இருக்கின்ற மாவட்டங்கள் வட மாவட்டங்கள்; இதெல்லாம் சமூகத்தில் பின்தங்கி இருப்பதற்கான அறிகுறிகள். அதனால் இதை எல்லாம் வைத்து அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.
கடந்த அரசு நடவடிக்கை எடுத்தார்கள். அதில் நீதிமன்றத்தில் சில குறிப்புகள் சொன்னார்கள். அந்த குறிப்புகள், குறைபாடுகளை நீக்கி புதிய சட்டம் கொண்டு வரலாம். கொண்டு வருவதற்கு எந்தத் தடையும் கிடையாது. இதை தமிழக அரசு உண்மையிலேயே கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், கொண்டு வந்திருப்பார்கள். அதனால் எங்களுக்கு முதலமைச்சருக்கு, இதுகுறித்த எண்ணம் இருக்கிறதா இல்லையா என்பது எங்களுக்கு கேள்வியாக இருக்கிறது. அதனால்தான், இன்று அவரைப் பார்த்துவிட்டு வந்தோம். இந்த கூட்டத்தொடரில் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம். பார்க்கலாம் என்ன பண்ணப் போகிறார்கள் என்று.
சாதிவாரிக் கணக்கெடுப்புக்கும், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என 1980ல் இருந்து பாமக வலியுறுத்தி வருகிறோம். இதற்காக நூற்றுக்கணக்கான போராட்டங்கள், ஆயிரக்கணக்கான அறிக்கைகள் எனப் பல முறை கொடுத்திருக்கிறோம். தமிழகத்தில் உள்ள 69 விழுக்காடு இட ஒதுக்கீடு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டுவதற்கான காரணம்'' என்றார்.