
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் 2,000 கோடி ரூபாயைத் தரச் சட்டத்தில் இடம் இல்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு எதிர்க்கிறது. உள்ளூர் மொழிக்கு முதலிடம் என்ற தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு ஏற்கிறதா இல்லையா?. ஏற்றால் தான் நிதி” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இவரது பேச்சுக்குத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மறுபுறம் தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கோவையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகத்தை திறந்து வைத்துவிட்டு நாளை ஈஷா யோகா மையத்தில் நடைபெற உள்ள சிவராத்திரி விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக இன்று அவர் கோவை வரவுள்ள நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையைக் கண்டித்து தந்தை திராவிட பெரியார் கழகத்தினர் கோவை பீளமேடு பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தி திணிப்பு மற்றும் மீனவர்கள் கைதை கண்டித்தும், மாநில அரசுக்கான கல்வி நிதியை தர வலியுறுத்தியும் கண்டனம் தெரிவித்து இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு போலீசார் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.