கடலூர் மாவட்ட ஊராட்சியின் 26 வது வார்டுக்கான மாவட்ட ஊராட்சி உறுப்பினரைத் தேர்வு செய்ய இடைத்தேர்தல் கீரப்பாளையம் ஒன்றியத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக, பாமக, அமமுக கட்சிகள் போட்டியிடுகின்றனர். இதில் கீரப்பாளையம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி பங்கேற்று தனது வாக்கினை பதிவு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பலத்தைப் பார்த்து அஞ்சி பாரதிய ஜனதாவும், ஆர்எஸ்எஸ் மற்றும் பிற்போக்கு சக்திகள் எங்களுக்கு எதிராக செயல்பட்டு எங்களை பலவீனப்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள். ஒரு காலத்திலும் காலச்சக்கரத்தை பின்னோக்கி சுழற்ற முடியாது. தமிழகத்தில் ஒரு சிறந்த ஆட்சி நடைபெறுகிறது. அதற்கு நாங்கள் துணையாக இருக்கிறோம். ஓராண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை செய்திருக்கிறார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு அறிவிக்கப்பட்ட செயல் திட்டத்தில் ஓராண்டுகளில் நிறைய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாஜகவினர் வாய் சொல் வீரர்களாக ஒப்புக்கு சப்பாணியாக இருப்பவர்கள். அவர்களால் எதையும் ஆக்கபூர்வமாக செய்ய முடியாது. எதிர்மறை விமர்சனங்களை செய்வார்கள். நடைமுறை ரீதியாக ஆக்கப்பூர்வமானவர்கள் அல்ல.
பாஜக தலைவர் அண்ணாமலையை பார்த்து கேட்கிறேன். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி 7 ஆண்டு ஆகிறது. இதுவரை ஒரே ஒரு செங்கல் மட்டுமே வைத்திருக்கிறார்கள். இந்த அரசாங்கத்தின் செயல் வேகம் அவ்வளவுதானா? மோடியின் திறமை அவ்வளவுதானா? பாஜகவின் சக்தி அவ்வளவுதானா? மக்களுக்கான எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து செயல்படுத்தினால்தான் மக்களுக்கு பயன். இதைக் கூட செய்ய முடியவில்லை. இதற்காக டெல்லிக்கு சென்று செல்வாக்கை நிரூபித்தால் இவர்களை நான் பாராட்டுகிறேன். இவர்கள் டெல்லிக்கு சென்றால் மோடியையும் பார்க்க முடியாது. அமித்ஷாவையும் பார்க்க முடியாது என்று எனக்கு தெரியும். சென்னையில் அமர்ந்து கொண்டு வீர வசனம் தான் பேசுவார்கள். செயல்படுகிற அரசை செயல்படவில்லை என்றும், செயல்படாத அரசை தூக்கி பிடிப்பதும்தான் இவர்களது கொள்கையாக இருக்கிறது.
தமிழகத்தின் நலனில் பாஜக கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்திற்காக அவர்கள் கொண்டு வந்த திட்டங்கள் என்ன? வந்தே பாரத் என்ற ரயில் திட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். அதில் தமிழ்நாட்டிற்கு ஒரு ரயில் கூட இல்லை. இதற்காக அண்ணாமலை போராட வேண்டும். தன்னுடைய நடை பயணத்தை கோபாலபுரத்திலிருந்து டில்லிக்கு திருப்பி சென்று மோடி வீட்டின் முன்பாக இதையெல்லாம் செய்ய வேண்டும் என அவர் செய்தால் அவரை நான் வாழ்த்திப் பாராட்டுவேன்'' என கூறினார்.
பேட்டியின்போது காங்கிரஸ் கமிட்டியின் மாநில எஸ்சி எஸ்டி பிரிவு தலைவர் ரஞ்சன்குமார் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.