கள்ளத் தொடர்பால் வந்த வினை, கண்டித்தேன் கேட்கவில்லை,
கழுத்தை அறுத்து வி்ட்டேன், கணவன் வாக்குமூலம்
தன் மனைவியின் கள்ளத் தொடர்பாகக் கண்டித்தேன் திருந்தவில்லை. கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டேன் என்று அலட்டிக் கொள்ளாமல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் சரண்டரான கணவன். நெல்லை மாவட்டத்தின் சங்கரன்கோவில் நகரின் பாரதியார் 4ம் தெருவிலிருக்கும் ஐயப்பன் (35) ஊர் ஊராகச் சென்று கிளி ஜோசியம் பார்ப்பவர். அவருக்கும் திருவேங்கடம் நகரிலுள்ள கந்தவேலின் மகளான முத்து (28) விற்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதன் பின் கணவன் மனைவி இருவரும் சேலம் சென்று விட்டனர். அங்கு அவர் கிளி ஜோசியம் தொழில் பார்த்திருக்கிறார். தம்பதியருக்கு நான்காண்டுகளாகக் குழந்தை இல்லையாம். கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இதன்பின் தொழில் பிரச்சினை காரணமாக ஐயப்பன் தன் மனைவி குழந்தையோடு ஊர் திரும்பியிருக்கிறார்.
இதனிடையே குடிப் பழக்கம் கொண்ட ஐயப்பனுக்கு குழந்தை பிறந்தது தொட்டு மனைவி மீது சந்தேகப்பட்டிருக்கிறார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை நிகழ்ந்திருக்கிறது. அதோடு தகராறு வேறு. இதனால் மனைவி முத்து, கோபித்துக் கொண்டு தன் தந்தை ஊரான திருவேங்கடம் வந்து விட்டார். இந்தச் சூழலில் மனைவியைத் தேடி வந்த ஐயப்பனை ஊர்ப் பஞ்சாயத்தார் சமாதானம் பேசி, திருவேங்கடத்திலேயே தனிக்குடித்தனம் வைத்தனர். ஆனாலும் விடாது கருப்பாகச் சந்தேகப் புயலில் தகராறுகள் அவர்களுக்குள் தொடர்ந்திருக்கின்றன.
இதனிடைய அவர்களின் குழந்தைக்கு உடல் நலம் குன்றியதால் சிகிச்சையின் பொருட்டு ஐயப்பன் நேற்று முன்தினம் தன் மனைவி மற்றும் குழந்தையை சங்கரன்கோவிலுக்கு அழைத்து வந்தவர் அங்குள்ள பாரதியார் 4ம் தெருவிலுள்ள தன் உறவினர் தமிழரசனுக்குச் சொந்தமான வீட்டில் தங்கியிருக்கிறார். அன்றைய இரவில் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. அதில் ஆத்திரமான ஐயப்பன் அதிகாலை நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த தன் மனைவி முத்துவின் வாயில் துணியை வைத்து அடைத்துத் துணியால் கட்டியவர் அங்கிருந்த கத்தியைக் கொண்டு அவளது கழுத்தை அறுத்திருக்கிறார். இதனால் அவளால் சத்தமி்ட முடியாமல் துடித்தவளின் உயிர், அங்கேயே பிரிந்திருக்கிறது. மனைவியைக் கொலை செய்த ஐயப்பன் அங்கிருந்து தப்பியிருக்கிறார்.
விடியும் நேரத்தில் குழந்தை மணி ராஜின் அழுகை சப்தம் கேட்டு உறவினர் தமிழரசன் வந்து பார்த்த போது முத்து கழுத்தறுக்கப்பட்டு சடலாமாய்க் கிடப்பது கண்டு அதிர்ந்தவர், நகர காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்திருக்கிறார். சம்பவ இடத்திற்கு வந்த நகர டி.எஸ்.பி.ராஜேந்திரன் மற்றும் இன்ஸ்பெக்டர் அருள் முத்துவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் தப்பிய கணவன் ஐயப்பன் தேவர்குளம் காவல் நிலையத்தில் சரண்டாகியிருக்கிறார். அவரிடம் போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில். திருமணத்திற்குப் பின்னர் குழந்தை பிறந்த பின், என் மனைவியின் போக்கு சரியில்லை என்று தெரிந்ததும் அவளைக் கண்டித்தேன். காலப்போக்கில் சரியாகிவிடும் என்று நினைத்தேன். அவள் திருந்தல. நான் வெளியூருக்கு ஜோசியம் தொழிலாகப் போய்விட்டு இரவு தான் திரும்புவேன் இந்த நேரத்தில் அவள் நடத்தை தவறுவதாகத் தகவல் தெரிந்தது. அவளுக்குத் தெரியாமல் நான் அவளைக் கண்காணித்ததில் அவளுக்கும், எனக்கும் நெருக்கமான உறவுக்காரர் ஒருவரோடு அவளிருந்தைக் கண்டு கோபமான நான், அவளோடு சண்டையிட்டேன். கண்டித்தேன். இதனால் எங்களுக்குள் அடிக்கடி சண்டை நடந்தது.
எங்கள் குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் அன்றைக்கு சங்கரன்கோவில் வந்த நாங்கள், உறவினர் வீட்டில் தங்கினோம். உடல்நலமில்லாத குழந்தைக்கு அங்குள்ள பள்ளிவாசலில் தண்ணீர் தெளித்தோம். இரவு நேரம் எங்களுக்குள் தகராறு நடந்தது. அதில் ஆத்திரமான நான், அவ வாயத் துண்டால் கட்டி கழுத்தை அறுத்துக் கொன்று விட்டேன் என்று குற்ற உணர்வின்றி அலட்டிக் கொள்ளாமல் ஐயப்பன் போலீசாரிடம் தொரிவித்திருக்கிறார். பலி வாங்கியிருக்கிறது ஊர் தேடி வந்த கள்ளத் தொடர்பு வினை
-பரமசிவன்
படங்கள் : ப.இராம்குமார்