மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்கு உட்பட்ட அரிட்டாபட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் நடத்தியது. இதில் வேதாந்தா குழுமத்தின் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலம் எடுத்திருந்தது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இந்த சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே தமிழக சட்டப்பேரவையில், அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்க உரிமையை ரத்து செய்ய வலியுறுத்தித் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இத்தகைய சூழலில் தான் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள இடத்தை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரை செய்திருந்தது. இதனைத்தொடர்ந்து டெல்லியில் மத்திய சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை நேற்று (22.01.2025) மதுரை மாவட்டம் மேலூர் தொகுதிக்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் அடங்கிய போராட்டக் குழுவினர் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தனர். இத்தகைய சூழலில் தான் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு இன்று (23.01.2025) உத்தரவிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மதுரை மாவட்டம் மேலூர் அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளதை வரவேற்கிறேன். இது மேலூர் பொதுமக்களின் தொடர் போராட்டத்திற்கும். மக்களின் குரலாக களத்தில் போராட்டங்கள், சட்டப்பேரவையில், ‘டங்ஸ்டன் தடுப்போம், மேலூர் காப்போம்’ என்ற வாசகம் பதிந்த மாஸ்க் அணிந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சென்றதுடன் இந்த டங்ஸ்டன் சுரங்கம் அமைவதை எதிர்த்தும், இவ்விவகாரத்தில் மேலூர் மக்களுக்கு நியாயம் கிடைக்கும் விதமாக நான் சட்டமன்றத்தில் ஆதாரங்களுடன் திமுகவின் கபட நாடகத்தை எடுத்துவைத்து பேசியதன் தொடர்ச்சியாக அதிமுக மேற்கொண்ட முன்னெடுப்புகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
தங்கள் உரிமைகளுக்காக, தொடர்ந்து போராடி வென்ற மேலூர் மக்களுக்கு எனது வாழ்த்துகள். டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் இரட்டை வேட நாடகமாடி மக்களை ஏமாற்ற முயற்சித்த முதல்வர் மு.க. ஸ்டாலினின் திமுக அரசின் சதிவேலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மேலூர் மக்களின் போராட்டத்தை உணர்ந்து, அவர்களின் எண்ணத்திற்கு ஏற்ப மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை ரத்து செய்ததன் மூலம் மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது” எனக்குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டியிருந்த பதிவில், “நான் முதலமைச்சராக இருக்கும்வரை, என்னை மீறி டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என்று உறுதிபடத் தெரிவித்தேன். சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினோம். மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் மத்திய அரசு பணிந்துள்ளது. இனி, மாநில அரசின் இசைவு பெறாமல் இத்தகைய சுரங்க ஏல அறிவிக்கைகளை மத்திய அரசு வெளியிடக் கூடாது. மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அ.தி.மு.க.,வும் துணைபோகக் கூடாது” எனக் குறிப்பிட்டியிருந்தார்.