ஆன்லைன் மற்றும் இணையதள மோசடி குறித்து அவ்வப்போது தமிழக டிஜிபி சைலேந்திரபாபு விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அண்மையில் டெலிகிராம் மோசடி குறித்து சைலேந்திரபாபு பேசியிருந்தார்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சைலேந்திரபாபு, ''நாம் இதுவரை சந்திக்காத பல்வேறு புதுப்புது குற்றங்கள் வந்து கொண்டிருக்கிறது. வெளிநாட்டிலிருந்து மொபைல் போன் மூலம் உங்களை காண்டாக்ட் செய்து எளிதில் உங்களிடம் உள்ள பணத்தை எடுத்துக் கொண்டு போய் விடுவார்கள். தொழில் அதிபர்களிடம் திருடி இருக்கிறார்கள்; அரசு ஊழியர்களை உயரதிகாரிகள் பேசுவதாக பேசி மெசேஜ் கொடுத்து பணத்தை திருடி இருக்கிறார்கள்; திருமண வரன் பார்க்கக்கூடிய பெண்களை குறி வைத்து வரன்கள் என வெளிநாட்டிலிருந்து பேசி பல லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
தொழில் தொடங்கக்கூடிய முனைவில் இருக்கக்கூடிய இளைஞர்களை தொடர்பு கொண்டு, ‘இந்த மாதிரி தொழில் இருக்கிறது. இந்த பொருளை வாங்கி அனுப்புங்கள்,. ஒரு லட்ச ரூபாய் மதிப்புடைய பொருளை வாங்கி எங்களுக்கு அனுப்பினால் நாங்கள் இரண்டு லட்சம் ரூபாய் தருவோம்’ என்று சொல்லி பல லட்சம் ரூபாய் ஏமாற்றி உள்ளார்கள்; வேலை தேடி அலையக்கூடிய இளைஞர்களை தொடர்பு கொண்டு வெளிநாட்டில் நல்ல வேலை இருக்கிறது என்று சொல்லி சில லட்சங்களை முதலீடு செய்யச் சொல்லி திருடக்கூடிய பல கும்பல்கள் இருக்கிறது. எனவே பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
இதற்காக காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஒருவேளை நீங்கள் உங்கள் பணத்தை விட்டு விட்டீர்கள் என்றால் தயவு செய்து உடனடியாக 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டால் சென்னை கட்டுப்பாட்டு அறையிலிருந்து உங்களுடைய ஃபோன் காலை எடுத்து உங்கள் பணத்தை இன்னொரு வங்கிக்கு ட்ரான்ஸ்பர் ஆகாமல் பாதுகாத்துக் கொடுத்து விடுவார்கள். ஆனால் அதனை நீங்கள் 24 மணி நேரத்திற்குள் செய்தாக வேண்டும்.
37 மாவட்டங்களிலும் சைபர் கிரைம் யூனிட்ஸ் இருக்கிறது. 9 மாநகர காவல் ஆணையகங்களில் சைபர் குற்றப்பிரிவு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. தேசிய அளவில், சர்வதேச அளவில் குற்றங்களை கண்டுபிடிக்க சிபிசிஐடி யூனிட் ஆரம்பித்திருக்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக மாநில சைபர் கட்டுப்பாட்டு மையம் இருக்கிறது. சர்வதேச அளவிலான குற்றங்கள், வெளிநாடுகளில் இன்டர்நேஷனல் போலீஸ் சம்பந்தப்பட்ட குற்றங்களில் அவர்களை தொடர்பு கொண்டு உங்கள் பணத்தை ரெக்கவர் செய்வதற்கான அமைப்புகள் இருக்கிறது. ஒருவேளை நீங்கள் சைபர் குற்றங்களில் ஏமாற்றப்பட்டு விட்டீர்கள் என்றால் உடனடியாக நீங்கள் கூப்பிட வேண்டியது 1930'' என்றார்.