தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் சோதனை செய்து வருகிறார்கள். இவர் மீது பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக தொடர் புகார்கள் வந்ததையடுத்து இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இவரது மனைவி, மகன்கள், மருமகள் உள்ளிட்டவர்கள் மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தருமபுரி, சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட அவருக்குச் சொந்தமான 57 இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தருமபுரியில் உள்ள அவரது வீட்டின் முன்பு அதிமுக தொண்டர்கள் குவிந்து வருகிறார்கள். காலை முதலே அவர்கள் அங்கு நின்றுகொண்டிருப்பதால் அவர்களுக்கு அதிமுக நிர்வாகிகள் காலை உணவு வழங்கி வருகிறார்கள். இட்லி, பொங்கல், மெதுவடை எனப் பிடித்த அயிட்டத்தைத் தொண்டர்கள் கேட்டு வாங்கிச் சாப்பிடுகிறார்கள். சிலர் "காலையில் பரவாயில்லை, மதியம் பிரியாணி கொடுங்கள்" என அதிமுக நிர்வாகிகளிடம் தங்களுடைய பிரியாணி ஆசையை வெளிப்படுத்தவும் மறக்கவில்லை.