வழிப்போக்கர்கள் கட்சி தொடங்குவது குறித்து கவலையில்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இருப்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளில் இருக்கக் கூடிய தீவுகளில் சென்று தங்கி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மீனவர்கள் பாதுகாப்புடன் உள்ளனர். அவர்கள் 51 விசை படகுகளில் கரை ஒதுங்கி உள்ளனர். யாரும் கவலைப்பட தேவையில்லை. தகவல் தெரியாமல் கடலுக்கு சென்றுள்ள மீனவர்களுக்கு விமானம் மூலமாக தகவல் வழங்கி வருகிறோம்.
குற்றப்பின்னணி கொண்டயாரும் அ.தி.மு.க.வில் கிடையாது. குற்றபின்னணி கொண்டவர்கள் வேட்பாளராக நிறுத்தப்படுவதாக கூறப்படும் கருத்தை மற்ற கட்சிகள் ஆராய்ந்து செயல்பட வேண்டும். டிடிவி தினகரன் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஆனால் அதிமுகவின் கட்சி கொடியையும், சின்னத்தையும் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. வழிப்போக்கர்கள் கட்சி தொடங்குவது குறித்து கவலையில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.