சேலத்தில் ஜெய்நகர் ஏரி, எருமாபாளையம் ஏரி, அம்மாள் ஏரி, காட்டூர் ஏரி, அம்மாபேட்டை குமரகிரி ஏரி ஆகிய ஏரிகளில் கணிசமான பகுதிகளை ஆக்கிரமித்து கட்டடங்கள், தனியார் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் கட்டப்பட்டு உள்ளன. ஆக்கிரமிப்புகளால் ஏரிக்கு வரும் நீர்வரத்துக் கால்வாய்கள் அடைபட்டுள்ளன. இதனால் லேசான மழை பெய்தாலே மழைநீர் சாக்கடைக் கழிவு நீருடன் கலந்து சாலையில் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, ஏரிகள் மற்றும் நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, உடனடியாக மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் (டிஒய்எப்ஐ) இன்று (ஜூலை 30, 2018) சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, கோரிக்கை அட்டைகளை கழுத்தில் அணிந்துகொண்டு நூதன முறையில் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் இதுகுறித்து முழக்கங்கள் ஏதும் எழுப்பாமல், கோரிக்கை அட்டைகளுடன் மவுனமாக மட்டும் சிறிது நேரம் நின்றுவிட்டு, கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் கொடுத்தனர்.
இதுகுறித்து டிஒய்எப்ஐ மாநகர செயலாளர் பெரியசாமி, மாவட்ட பிரதிநித பிரவீன்குமார் ஆகியோர் கூறுகையில், ''ஊற்றுமலையில் இருந்து அம்மாள் ஏரிக்கு வரும் நீர்வழித்தடங்களும், சன்னியாசிக்குண்டு மலை பகுதியில் இருந்து ஜெய் நகர் ஏரிக்கு வரும் நீர் ஓடையும் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டதால் அவை காணாமல் போய்விட்டன.
காட்டூர், அம்மாபேட்டை ஏரிகளும் ஆக்கிரமிப்பில் உள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளால் சமீபத்தில் பெய்த மழை வெள்ளத்தில் மாநகரம் முழுவதும் பாதிப்புக்கு உள்ளானது. கிச்சிப்பாளையம், காந்தி நகர், குறிஞ்சி நகர், தாதகாப்பட்டி, மூணாங்கரடு பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. ஒரு சிறுவன் சாக்கடையில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்தான்.
ஆகவே உடனடியாக ஏரிகள் மற்றும் நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். அப்போதுதான் சேலம் மாநகரை இயற்கை சீற்றத்தில் இருந்து பாதுகாக்க முடியும். நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்க வேண்டும்,'' என்றனர்.