திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகா பெருவயல் கிராமத்தில் மிட்சுபிஷி நிறுவனத்தின் ஏ.சி தயாரிப்பு தொழிற்சாலை அமைய உள்ளது. 100% அந்நிய நேரடி முதலீட்டின் மூலம் ஏ.சி மற்றும் கம்பரசர் உற்பத்திக்கான ஆலையை அந்நிறுவனம் அமைக்க இருக்கிறது. 52.4 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த உற்பத்தி ஆலை அமைய உள்ளது. இதனால் 2029க்குள் 2004 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்.
ஜப்பானை சேர்ந்த மிட்சுபிஷி நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், தொழிற்சாலை அடிக்கல் நாட்டு விழா சென்னை ஆர்.ஏ.புரத்தில் இன்று நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் மிட்சுபிஷி நிறுவனத்தின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு வரும் 23 ஆம் தேதி செல்கிறேன். முன்னணி தொழில்துறை நிறுவனங்களைச் சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய அழைக்க உள்ளேன். ஜப்பானிய முதலீட்டாளர்கள் பெரிதும் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ஏற்றுமதி தொடர்பாக தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பெண்களை அதிக அளவில் பணியமர்த்தும் நிறுவனங்களை தமிழக அரசு வரவேற்கிறது.
புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் இந்திய அளவில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. கடந்த ஓராண்டில் தொழில்துறை சார்ந்த நிகழ்ச்சிகளில்தான் அதிகம் கலந்துகொண்டேன். 2024 ஆம் ஆண்டு ஜனவரி மதம் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு வருமாறு உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்க உள்ளேன். மேலும் தமிழ்நாட்டில் அதிக அளவு ஜப்பானியர்கள் வசித்து வருகிறார்கள். இந்த உறவை மேலும் வலுப்படுத்திடும் வகையில் இந்த முதலீட்டு குழுவிற்கு தலைமை தாங்கி நான் ஜப்பான் செல்ல இருக்கிறேன்'' என்றார்.