திண்டுக்கல் மாவட்டம், ஆத்துாரில் கலைஞரின் கனவு இல்லம் திட்ட பயனாளிகளுக்கு பணி ஆணைகளை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கினார். பழனி சட்டமன்ற உறுப்பினரும், கிழக்கு மாவட்டசெயலாளர் ஐ.பி.செந்தில் குமார், திட்ட அலுவலர் திலகவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “தமிழ்நாடு முதலமைச்சர், தமிழக மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அவற்றை தொடர்ந்து செயல்படுத்தி, இந்தியாவிலேயே தலைசிறந்த முதல்வராக திகழ்கிறார். தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வருவதோடு, தேர்தல் நேரத்தில் அறிவிக்காத பல்வேறு திட்டங்களை அறிவித்து, அத்திட்டங்கள் அனைத்தும் கடை கோடி மக்களையும் சென்றடையும் வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
தமிழகத்தை குடிசை இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் பாதுகாப்புடன் வசிக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு, தமிழக அரசு சார்பில் இலவச வீடுகள் கட்டி வழங்குவதற்காக “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். ஊரகப்பகுதியில் உள்ள குடிசைகளை மாற்றி, அனைவருக்குமே பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தருவதுதான் இந்த திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்திற்காக ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் 1,023 குடிசைகள், புதிய குடிசை வீடுகள் கணக்கெடுப்பில் 1,126 குடிசைகள், அனைவருக்கும் வீடு திட்டத்தில் 1,946 குடிசைகள் என மொத்தம் 4095 குடிசைகள் கண்டறியப்பட்டு, அந்த குடிசைகள் “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 15 மாவட் டங்களில் 5,000-க்கும் குறைவான குடிசைகள் உள்ள மாவட்டங்களில் திண்டுக்கல் மாவட்டம் உள்ளதால், அனைத்து குடிசைகளையும் 2024-2025-ஆம் ஆண்டிலேயே ‘கலைஞரின் கனவு இல்லம்’திட்டத்தில் எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் தகுதியான குடும்பங்களில் பட்டா இல்லாத பயனாளிகளுக்கு உடனடியாக பட்டா வழங்கி, அந்தப்பயனாளிகளுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்து, ‘குடிசை இல்லாத மாவட்டம்’ என்று மாற்ற வேண்டும். அதோடு விடுபட்டகுடிசைகள் ஏதும் கண்டறியப்பட்ட பின்இக்கணக்கெடுப்பில் சேர்த்திட உரிய நடவடிக்கை மேற்கொண்டு, இந்த நிதியாண்டிற்குள் வீடுகள் கட்டி முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீடுகட்ட குறைந்தபட்ச பரப்பளவு சமையலறை உட்பட 360 சதுர அடியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வீடும் தலா ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளன். அதன்படி, ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தில் ஆத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் 26, ஆத்துார் ஊராட்சியில் 77, அக்கரைப்பட்டி ஊராட்சியில் 46, அம்பாத்துரை ஊராட்சியில் 161, அய்யங்கோட்டை ஊராட்சியில் 22, ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் 14, என்.பஞ்சப்பட்டி ஊராட்சியில் 46, பாறைப்பட்டி ஊராட்சியில் 30, கலிக்கம்பட்டி ஊராட்சியில் 38, காந்திகிராமம் ஊராட்சியில் 31, சித்தரேவு ஊராட்சியில் 203, சீவல்சரகு ஊராட்சியில் 58, செட்டியப்பட்டி ஊராட்சியில் 50, தேவரப்பன்பட்டி ஊராட்சியில் 95, தொப்பம்பட்டி ஊராட்சியில் 77, பாளையங்கோட்டை ஊராட்சியில் 34, பித்தளைப்பட்டி ஊராட்சியில் 22, போடிகாமன்பட்டி ஊராட்சியில் 46, மணலுார் ஊராட்சியில் 34, முன்னிலைக்கோட்டை ஊராட்சியில் 22, வக்கம்பட்டி ஊராட்சியில் 22, வீரக்கல் ஊராட்சியில் 102 பயனாளிகள் என மொத்தம் 1,256 பயனாளிகளுக்கு இன்று (05.08.2024) வீடு கட்டுபதற்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் வீடு இல்லாதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒரு பயனாளி வீடு கட்டுவது என்பது அவரது எதிர்காலத்திற்காக வாழ்நாளில் ஒருமுறை மேற்கொள்ளும் பணியாகும். இப்பயனாளிக்கு தகுதியிருப்பின் மகளிர் சுய உதவிக்குழு மூலம் ரூ.50,000 அல்லது கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கலாம். கலைஞர் கனவு இல்ல பயனாளிகளுக்கு ரூ.50,000 முதல் ரூ.1.00 லட்சம் வரை கடனுதவி மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், ஏற்கனவே கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளை பழுதுபார்க்க ரூ.2000 கோடி நிதியை முதலமைச்சர் ஒதுக்கியுள்ளார்கள். நியாய விலைக்கடைகளில் தரமான அரசி வழங்கப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 6 கல்லுாரிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், நத்தம் சட்டமன்ற தொகுதியில் அரசு கல்லூரி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதலமைச்சர் ஏழை எளிய பொதுமக்களின் துயர் துடைத்திட இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞரின் மகளிர் உரிமைத்திட்டத்தினை ஏற்படுத்தியதனால் தற்போது 1.16 கோடி பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றார்கள். தகுதியுள்ளவர்கள் விடுபட்டியிருந்தால் அவர்களின் மனுக்களும் பரிசீலித்து உரிமைத் தொகை பெற்றுத்தரப்படும். கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்களின் நலன் கருதி, அவர்களின் இல்லங்களுக்கே சென்று தொற்ற நோய்களான உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களுக்கு பரிசோதனைகள் செய்து, மருந்துகள் வழங்குவதற்காக தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற மகத்தான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் நோயாளி களுக்குத் தேவையான பிசியோ தெரபி (இயன்முறை சிகிச்சை) மற்றும் வலி நிவாரணம், ஆதரவு சிகிச்சை, பல்வேறு பரிசோதனைகள் ஆகியவை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மாணவிகளின் கல்வி பொருளாதார காரணங்களால் தடைபடக்கூடாது என்பதற்காக புதுமைப் பெண் திட்டத்தினை ஏற்படுத்தி மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தினை விரிவுபடுத்தி மாணவர்களும் பயன்பெறும் வகையில் தமிழ் புதல்வன் திட்டத்தினை ஏற்படுத்தி மாணவர்களுக்கும் ரூ.1000 வழங்கும் திட்டம் நடப்பு கல்வியாண்டு முதல் செயல் படுத்தப்படவுள்ளது. பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் தற்போது, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
ஆத்தூர், நிலக்கோட்டை மற்றும் திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்திட ரூ.550 கோடி ஒதுக்கீடு செய்து வைகை அணையிலிருந்து தண்ணீர் கொண்டுவர புதிய திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளை பொறுத்தமட்டில் ஊரகப் பகுதிகளை நகராட்சி, மாநகராட்சிகளுடன் இணைப்பது, மக்கள்தொகை அதிகம் உள்ள உள்ளாட்சி அமைப்புகளைப் பிரிப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு நடத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதன் பின்னர் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறும். அரசு அலுவலகங்களில் முறைகேடுகள் முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்டு, தீர்வு வழங்கும் முதல்வராக, இந்தியாவிற்கே முன்மாதிரி முதல்வராக திகழ்கிறார். பொதுமக்களின் தேவையினை கருத்தில் கொண்டு, திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்திட உள்ளாட்சி அமைப்பு பிரநிதிகள், அரசு அலுவலர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்றார்.