தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு காரணமான சமூக விரோதிகள் யார் என்பது ரஜினிகாந்திற்க்கு தெரிந்ததை போல் எனக்கும் தெரியும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.
இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஸ்டெர்லைட் ஆலை பாதிப்புகள் அதிகரிப்பிற்கும், போராட்டம் என அனைத்திற்கும் திமுக தான் காரணம் என்று முதல்வர் நேற்று சொன்னது உண்மை. பா.சிதம்பரம் இயக்குனராக இருந்த போது ஸ்டெர்லைட்டுக்கு உதவவில்லையா? தூக்குக்குடியில் போராட்டத்தின் போது தீவைப்பு, கல்வீச்சு என வன்முறையில் ஈடுபட்டது யார் என்பதில் சந்தேகம் இருக்கிறது என்று சொல்வதற்கு ரஜினி உட்பட மற்ற கட்சிகளுக்கு உரிமை உள்ளது.
அபாயகரமாக நடந்தது மக்கள் என்று சொல்வது மூலம் மக்களை தான் திமுக, கம்யூனிஸ்ட், திருமாவளவன் உள்ளிட்டோர் கொச்சைப்படுத்துகிறார்கள். திமுக மாதிரி சட்டமன்றத்தை காங்கிரஸ் புறக்கணித்து விட்டது. மோசமான முன்னுதாரனத்தை சட்டமன்ற வரலாற்றில் ஸ்டாலின் படைத்து வருகிறார்.
ஆக்கப்பூர்வமான திட்டத்தை எதிர்த்தால் வேலைவாய்ப்பு உள்ளிட்டவை பாதிக்கும். எதிர்கட்சிகளால் மக்களின் நலன் பாதிக்கப்படுகிறது. தூத்துக்குடி தாண்டி தமிழகத்தில் பல பிரச்சினைகள் உள்ளது. அது தொடர்பாக சட்டமன்றத்தில் மட்டுமே விவாதிக்க முடியும்.
நேர்மறையான அரசியலை முன்னெடுக்க வேண்டும். எதிர்மறை கருத்துகளுக்கு மோசமான விமர்சனம் செய்வது தவறு. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு திட்டங்களை கொண்டு வருவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அறிக்கையின் அடிப்படையிலேயே மத்திய அரசு முடிவு செய்யும்.
தூத்துக்குடியில் தீ வைப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டது சமூக விரோதிகள். சமூக விரோதிகள் என கூறுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தான் சமூக விரோதிகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள். போராட்டங்கள் கலாட்டாவாக மாறிவிட கூடாது என்பது தான் ரஜினிகாந்த் குரலிலும் இருக்கிறது எங்கள் குரலிலும் இருக்கிறது. சமூக விரோதிகள் யார் யார் என்பது ரஜினிகாந்திற்க்கு தெரிந்ததை போல் எனக்கும் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.