
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை அனுபவித்து வந்த பேரறிவாளன் பல ஆண்டுகால சட்ட போராட்டத்திற்கு பின் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசின் தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் தாமதப்படுத்தியது தவறு என கருத்து தெரிவித்த நீதிபதிகள், பேரறிவாளனை விடுதலை செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். இதனால் 30 ஆண்டுகள் அனுபவித்து வந்த பேரறிவாளனின் சிறைவாசம் முடிவுக்கு வந்தது. ஆளுநர் முடிவெடுக்காமல் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தது அரசியலமைப்பு சட்டப்படி தவறு. 161 வது பிரிவில் ஆளுநர் முடிவெடுக்க தவறினால் உச்சநீதிமன்றமே முடிவெடுக்க வழிவகை செய்யும் சட்டப்பிரிவு 142- ஐ பயன்படுத்தி இந்த தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வேலூர் ஜோலார்பேட்டை இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பேரறிவாளன், ''தமிழ்நாட்டு மக்களும், உலகத்தில் உள்ள தமிழர்களும் என்னை ஆதரித்து அன்பு செலுத்தினார்கள். தங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாக நினைத்தார்கள். இதெற்கெல்லாம் மூலக்காரணம் என்னுடைய அம்மா. இது எல்லோருக்கும் தெரியும். அவருடைய தியாகம், போராட்டம், ஆரம்ப காலங்களில் நிறைய அவமானங்களை சந்தித்துள்ளார், நிறைய புறக்கணிப்புகளை சந்தித்துள்ளார், நிறைய வேதனை, வலிகளை சந்தித்துள்ளார். அதையெல்லாம் கடந்து 31 ஆண்டுகாலம் எனக்காக போராடியுள்ளார்கள். எங்களிடம் ஒரேஒரு காரணம்தான் இருந்தது, அது எங்களுக்கான உண்மை எங்கள் பக்கம் இருந்தது. அதுதான் இந்த வலிமையை கொடுத்தது என நம்புகிறேன்.
மார்சியம் கார்க்கியினுடைய 'தாய்' நாவலை நான் எனது வாழ்வில் நான்குமுறை படித்துள்ளேன். என்னுடைய 18, 19 வயதில் முதலில் படித்தேன். பின்னர் சிறைப்பட்ட பிறகு படித்தேன், அதன்பிறகு தூக்கு கிடைத்த பிறகு படித்திருக்கிறேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் அது எனக்கு ஒவ்வொரு உணர்வை கொடுத்துள்ளது. ஒரு காலகட்டத்திற்கு பிறகுதான் அதனை எனது அம்மாவோடு ஒப்பிட ஆரம்பித்தேன். இதை நான் அம்மாவிடம் கூட சொன்னதில்லை இதுவரை. ஏனென்றால் எங்களுக்குள் இருக்கும் அந்த இயல்பான உறவு போய்விடக்கூடாது என்பதற்காக அதை சொல்ல தயங்கியிருக்கிறேன். அதை இப்பொழுது சொல்ல வேண்டும் என நினைக்கிறேன்.
சட்டப்போராட்டத்தில் ஒவ்வொருமுறை தோற்கும்பொழுதும் நான் எனது அம்மாவை பார்க்கத்தான் அஞ்சுவேன். ஏனென்றால் மீண்டும் எழவேண்டும். ஆனால் எனது அம்மாவின் உழைப்பை உறிஞ்சிட்டேனே... அம்மாவின் தனி வாழ்கையை திருடிவிட்டேனே... என்ற எண்ணம், வேதனை இருக்கும் எனக்கு. இந்த சட்டப் போராட்டத்தில் தமிழக அரசின் ஆதரவு, தமிழக மக்களின் ஆதரவு எனப் பெரும்தளத்தை உருவாக்க காரணமாக இருந்தது எனது தங்கை செங்கொடியின் உயிர் தியாகம்'' என்றார்.
முதல்வரை சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு, ''சந்திப்பேன்... அவரை மட்டுமல்ல ஆதரவளித்த அனைத்து அரசியல் தலைவர்களையும் சந்திப்பேன்'' என்றார்.