அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சுதாகர் இன்று காலை இயற்கை எய்தினார். அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக ட்விட்டரில் பதிவிட்ட ரஜினிகாந்த் "என்னுடைய அருமை நண்பர் வி.எம்.சுதாகர் நம்மை விட்டுப் பிரிந்தது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அவரது உடல் அண்ணாநகர் கிழக்கு லோட்டஸ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. ரஜினி அங்கு நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், “சுதாகர் என்னுடைய நீண்டகால நண்பர். என் மேல் மிகவும் ஆன்ம பாசம் வைத்திருந்தவர். இரண்டு, மூன்று வருடங்களாகவே அவரது உடல்நிலை மிகவும் சரியில்லாமல் இருந்தது. பெரிய பெரிய மருத்துவமனைகளில் எல்லாம் கூட அவரை காப்பாற்ற முயற்சி செய்தோம். ஆனால், நம்மை விட்டு அவர் இத்தனை சீக்கிரம் பிரிந்து செல்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
அவரது ஆத்மா சாந்தியடையட்டும். எனக்கு அவருடனான நினைவுகள் மிக அதிகம். அவர் எப்பொழுது பார்த்தாலும் நான் சந்தோசமாக இருக்க வேண்டும், நான் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணியவர். எப்பொழுதும் என்னைப் பற்றிய யோசித்துக் கொண்டிருப்பார். அவ்வளவு ஒரு நல்ல மனிதர். ஒரு நல்ல நண்பனை நான் இழந்து விட்டேன். இது மிக வருத்தமளிக்கக் கூடிய ஒன்று” எனக் கூறினார்.