சென்னை குரோம்பேட்டை பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் மதியழகன். இவரது மகள் ஸ்வேதா (20), தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ லேப் டெக்னீஷியன் இரண்டாமாண்டு படித்துவந்தார். கடந்த செப். 23ஆம் தேதி தாம்பரம் ரயில் நிலைய நுழைவாயிலில் நின்றுகொண்டிருந்த ஸ்வேதாவை, கார் தொழிற்சாலையில் பணிபுரியும் ராமச்சந்திரன் என்ற இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்தார். மேலும், தனது கழுத்தையும் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மருத்துவனையில் சேர்த்த சேலையூர் போலீசார், சிகிச்சைக்குப் பின்னர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஸ்வேதா மரணமடைந்த நிலையில், இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில், மாணவியின் பெற்றோர் சென்னை காமராஜர் சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், ‘பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள தாம்பரம் ரயில் நிலையத்தில் கொடூரமான முறையில் கொலை செய்த ராமச்சந்திரனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். இந்த வழக்கில் முறையாக விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய டி.ஜி.பி உதவி செய்ய வேண்டும்’ என தெரிவித்திருந்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்வேதாவின் தாய் கூறியதாவது, “காலேஜ்க்குப் போன என் பொண்ண ராமச்சந்திரன் என்றவன் குத்திக் கொன்னுட்டான். அவன் ஜெயில இருக்கான்னு காதுலவுழுது. மற்றப்படி அவன என்ன செஞ்சாங்க, என்னன்னு எங்களுக்கு ஒன்னுமே தெரியல. ஒரு மாதத்துக்கு மேல ஆகுது. நான் என் பொண்ண பறிக்கொடுத்து, வீட்டுல தினமும் அழுதுக்கிட்டுத்தான் உக்காந்திருக்கோம். இறப்பு சான்றிதழ் மற்றும் போஸ்ட்மார்டம் குறித்து எது கேட்டாலும் தர மாட்டிக்காங்க. அவனுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என தெரிவித்தார்.