ஓமலூர் அருகே மனைவி மீது கொதிக்கும் சாம்பாரை ஊற்றிவிட்டு தலைமறைவான கணவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கருப்பணம்பட்டியைச் சேர்ந்தவர் ராகவன் (42). இவருடைய மனைவி நித்யா (37). இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். ராகவனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வருகிறது. சரியாக வேலைக்குச் செல்வதில்லை என்றும் கூறப்படுகிறது. மது போதையில் அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததோடு, அவருடைய நடத்தையிலும் சந்தேகப்பட்டு தாக்கி வந்துள்ளார்.
இந்நிலையில், நவ. 22ம் தேதி மாலை குடிபோதையில் வீட்டுக்கு வந்த ராகவன், அங்கே சமையல் செய்து கொண்டிருந்த நித்யாவிடம், இன்று என்ன குழம்பு வைத்தாய்? எனக்கேட்டுள்ளார். காய்கறிகள் வாங்க காசில்லாததால் தக்காளி பழத்தை மட்டும் போட்டு சாம்பார் வைத்திருப்பதாகச் சொல்லி இருக்கிறார்.
இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த ராகவன், அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த சாம்பாரை எடுத்து மனைவி மீது ஊற்றினார். இதில் நித்யாவின் தாடை, மார்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் நித்யாவை மீட்டு உடனடியாக ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நித்யா அளித்த புகாரின்பேரில் கொதிக்கும் சாம்பாரை உடல் மீது ஊற்றியது தொடர்பாக ராகவன் மீது 3 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவல்துறையினருக்கு பயந்து கொண்டு ராகவனும் தலைமறைவானார். அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.