இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றிய செயலாளரும், திருவாரூர் மாவட்டக் குழு உறுப்பினருமான நடேச தமிழார்வன், எட்டு பேர் கொண்ட மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை உண்டாக்கியிருக்கிறது.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம் ஒளிமதி கிராமத்தைச் சேர்ந்தவர் நடேச தமிழார்வன். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் வழக்கறிஞராகவும் இருந்து பணியாற்றி வருகிறார். 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்து வருகிறார். அடிப்படை உறுப்பினரில் துவங்கி படிப்படியாக வளர்ந்து இன்று நீடாமங்கலம் ஒன்றிய செயலாளராகவும், மாவட்டக்குழு உறுப்பினராகவும் உயர்ந்துள்ளார்.
விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு எந்த பிரச்சனையானாலும் முதல் ஆளாக களத்தில் நின்று போராட்டம் நடத்துவது, மக்கள் பிரச்சனைகளை அரசு கவனத்திற்கு கொண்டு செல்லுவது இவருடைய வாடிக்கை.
சமீபத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை அதிகாரிகள் பார்வையிட வேண்டும், என விவசாயிகளோடு வயலில் நின்று போராட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு நீடாமங்கலம், கொரடாச்சேரி உள்ளிட்ட பகுதியில் கட்சியை வளர்த்த பெருமையும் இவருக்கு உண்டு.
இந்த சூழலில், நடேச தமிழார்வன் இன்று (10/11/2021) மாலை 05.00 மணியளவில் நீடாமங்கலத்தில் இருந்து தனது ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பின்தொடர்ந்த 8 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்திருக்கின்றனர். இந்த சம்பவத்தால் நீடாமங்கலம் பகுதியே பதற்றமான சூழலுக்குச் சென்றிருக்கிறது. திருவாரூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையும், கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி, பட்டுக்கோட்டை செல்லும் சாலையும் முற்றிலுமாக அவரது ஆதரவாளர்களால் முடக்கப்பட்டு பேருந்துகள் நிறுத்தப்பட்டிருக்கிறது.
நடேச தமிழார்வனுக்கு ஏற்கனவே அந்த பகுதியில் உள்ள பிரபல ரவுடி ஒருவர் அடிக்கடி கொலை மிரட்டல் விடுவதாகவும், இடையூறு செய்ததாகவும் அவரது கட்சிக்காரர்களிடமும், போலீசாரிடமும் கூறியிருக்கிறார். அவர்கள் தான் இந்த கொலையை செய்திருக்க வேண்டும் என்கிறார்கள் கம்யூனிஸ்ட் கட்சியினர்.