
திருச்சி மாவட்டம், எடமலைப்பட்டி புதூர், ஜே.ஜே.நகர் பகுதியைச் சேர்ந்த கோபால் என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி, விவாகரத்து பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர், மீண்டும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அனிதா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் கோபால், வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டரால் அனிதாவை தாக்கியுள்ளார். இதில் அனிதாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் உள்ளவர்கள் இதுகுறித்து எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், காயமடைந்த அனிதாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில், அவர் இன்று (08.10.2021) காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கோபால் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து அவரை கைது செய்தனர்.