தான் வாங்கிய கடனை அடைக்க முடியவில்லையென்றால் என்ன செய்யலாம்? அதற்காக இந்த செந்தில்குமார் செய்ததை போல் செய்யக் கூடாதுங்க என பரிதாபமாக கூறுகிறார்கள் ஈரோட்டு மக்கள்.
ஈரோடு சின்னசடையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். ஸ்பின்னிங் மில் ஒன்றை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். இவரது மனைவி சங்கீதா, இவர்களுக்கு கண்ணன் என்ற மகன் உள்ளார். செந்தில்குமார் ஸ்பின்னிங் மில்லை நடத்த சிரமப்பட்டு பணப் பிரச்சனையால் அவருக்கு தெரிந்தவர்களிடம் தொடர்ந்து கடன் அதிகம் வாங்கியிருந்தார்.
ஒரு கட்டத்தில் தொழில் நஷ்டம் அடைந்தது. வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் ஒரு முடிவு செய்து மனைவி மகனை வீட்டிலேயே விட்டுவிட்டு கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பே வீட்டை விட்டு எங்கேயோ சென்றுவிட்டார். ஆனால் கடன் கொடுத்தவர்கள் சும்மா இருப்பார்களா? மனைவி சங்கீதாவிடம் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்தனர். அந்தப் பெண்ணும் வீட்டை விட்டு போன கணவர் திரும்பி வந்து விடுவார் உங்கள் பணத்தை கொடுத்து விடுவோம் என நம்பிக்கையாக கூறி வந்துள்ளார். ஆனால் மூன்று வருடம் கழித்தும் தாக்குப் பிடிக்க முடியவில்லை. கணவன் வாங்கிய கடன் தொல்லையால் மனைவி சங்கீதா மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், தொடர் மனவேதனையில் இருந்த சங்கீதா நேற்று வீட்டில் தற்கொலைக்கு முடிவை நாடினார். அவர் வீட்டருகே இருந்த அக்கம்பக்கத்தினர் அப்பெண்னை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, ஏற்கனவே இவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தொழில் நடத்த கணவன் வாங்கிய கடன் கணவனை எங்கோ எஸ்கேப்பாக வைத்துவிட்டு அப்பாவி பெண்னின் உயிரை பழிவாங்கிய சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.