


தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு உட்பட தென்மாநிலங்கள் பாதிக்கப்படுவது குறித்து விவாதித்து சில முடிவுகளை எடுப்பதற்காக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கைக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது.
இந்த கூட்டத்தில், வெளி மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அக்கட்சிகளின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொள்கின்றனர். கலந்து கொள்ளும் தலைவர்களுக்கு, தமிழ்நாட்டின் பாரம்பரிய பத்தமடை பாய், தோடர்களின் சால்வை, காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப்புடவை, ஊட்டி வர்க்கி, கன்னியாகுமரி கிராம்பு, கோவில்பட்டி கடலை மிட்டாய், ஈரோடு மஞ்சள், கொடைக்கானல் பூண்டு ஆகிய தமிழ்நாட்டின் சிறப்பு வாய்ந்த பொருட்கள் அடங்கிய பரிசுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.
தமிழகத்தின் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரித்த அழகிய பெட்டியில் அந்த பரிசு பொருட்கள் அனைத்தும் அடுக்கப்பட்டு விருந்தினர்களுக்கு பரிசுப் பெட்டகமாக அளிக்கப்படுகிறது. மேலும், இன்று நடக்கும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் ஆங்கிலம் மற்றும் அவரவர் தாய்மொழியில் பெயர்ப்பலகைகள், அவரவர்களின் தாய் மொழியில் மொழிபெயர்ப்பு கருவிகள் ஆகியவைகளை ஏற்பாடு செய்துள்ளது தமிழக அரசு. கூட்டத்தில் கலந்து கொள்ளும் விருந்தினர்களுக்கு தமிழ் மொழிப் பிரச்சனை வந்து விடக்கூடாது என்பதற்காகவும், தமிழில் பேசப்படும் கருத்துகளின் ஆழமான பொருள், வெளிமாநில அரசியல் தலைவர்களின் தாய்மொழியில் மொழிப்பெயர்க்கப்படும் போதுதான் தமிழ்நாடு எடுத்துச் சொல்லும் பிரச்சனையின் வீரியத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடியும் என்பதற்காக இத்தகைய ஏற்பாடுகளை செய்திருக்கிறது தமிழக அரசு.