கோவை மாநகர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு சாரஸ் என்கிற பேஸ்ட் போன்றொரு போதைப் பொருளும், கஞ்சா விற்பனையும் அபாரமாய் நடந்து கொண்டிருக்கிறது எனத் தமிழ்நாடு போதைப் பொருள் தடுப்புப்பிரிவு கூடுதல் இயக்குனர் ஷகில் அக்தருக்கு தகவல் கிடைத்தது.
அவர் உத்தரவின் பேரில் மாவட்ட கண்காணிப்பாளர் வின்சென்ட் தலைமையில், இன்ஸ்பெக்டர் சரவணன். எஸ்.ஐ மகேந்திரன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒண்டிபுதூர் பகுதியில் சந்தேகத்திற்கு இடம் கொடுக்கும்படி ஓர் ஆணும், பெண்ணும் நின்று கொண்டிருப்பதை கண்டு விசாரித்தனர்.
அப்போது அவர்கள் கைகளில் வைத்திருந்த பைகளில் சோதனை செய்தபோது, 1.200 கிலோ சாரஸ் போதைப் பொருளும், 2 கிலோ கஞ்சாவும் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அவர்களை விசாரித்தபோது, மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த பாண்டி மகன் சிங்கம் (40) என்றும், அவரது மனைவி பாண்டியம்மாள் என்பதும் தெரிய வந்தது.
எங்கிருந்து இந்த போதைப் பொருட்கள் வாங்குகிறீர்கள்..? என போலீஸ் கேட்கும் கேள்விக்கு கணவனும், மனைவியும் எந்த பதிலும் கொடுக்காத நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.