தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை சார்பில், தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் மூலம் தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய 9 நகரங்களில் நவீன வசதிகளுடன் பெண்கள் தங்குவதற்காக ‘தோழி’ விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்த விடுதிகளில் 24 மணி நேரமும் பாதுகாப்பு வசதி, பார்க்கிங் வசதி, பயோ-மெட்ரிக் வசதி, இலவச வை- பை, பொழுதுபோக்கு அம்சங்கள், அயனிங் வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தோழி விடுதி குறித்த முழுமையான விவரங்களை www.tnwwhcl.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். விடுதி அறைகளில் தனியாகவும், இருவர், நான்கு பேர், ஆறு பேர் என அறையை பகிர்ந்து கொள்ளும் முறையும் உள்ளது.
இந்நிலையில் தோழி விடுதிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில், “தோழி விடுதிகள் - இது முன்னேறும் மகளிர்க்கான முகவரி. மகளிர்க்குச் சொத்துரிமை, உள்ளாட்சியில் 33 விழுக்காடு ஒதுக்கீடு, உயர்கல்வியை ஊக்குவிக்கும் புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என மகளிர் முன்னேற்றத்துக்கான நமது திட்டங்களுக்கு மேலும் வலுசேர்க்கும் திட்டம் இது. டாக்டர் நடேசனாரின் 'திராவிடர் இல்லம்' போல், திராவிட மாடல் ஆட்சியின் தோழி விடுதிகளும் வரலாற்றின் பக்கங்களில் நிலைகொள்ளும்” எனத் தெரிவித்துள்ளார்.