
சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர்கள் நான்கு பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்த நிலையில், இது தொடர்பாக கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து புகார் தொடர்பாக தேடப்பட்டு வந்த ஹரிபத்மனை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். மகளிர் ஆணையம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து கலாஷேத்ரா கல்லூரி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் டிஜிபி லத்திகா சரண் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
பாலியல் தொல்லை குறித்து புகார் கொடுத்த மாணவர்களை கலாஷேத்ரா நிர்வாகம் மிரட்டுவதைக் கண்டித்தும், ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையிலான குழுவினரின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள ஹரிபத்மன் ஜாமீனில் வராமல் தடுக்க வேண்டும் என்றும், குற்றச்சாட்டுக்கு உள்ளான மற்ற மூவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி நேற்று (10.04.2023) கலாஷேத்ரா கல்லூரி முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில் மாநில மகளிர் ஆணையத்தை தொடர்ந்து இன்று மனித உரிமைகள் ஆணையமும் கலாஷேத்ரா கல்லூரியில் விசாரணையில் ஈடுபட்டது. 6 வார காலத்திற்குள் விசாரணைக் குழு அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமைகள் ஆணையத்திற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இன்று காலை 11.30 மணிக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் காவல்துறை எஸ்.பி. மகேஸ்வரன் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவினர் காலாஷேத்ராவில் விசாரணையை துவங்கினர். இந்த விசாரணை குழு சுமார் 1 மணி அளவில் தனது விசாரணையை நிறைவு செய்தது. இந்த ஒன்றரை மணி நேரத்தில், கலாஷேத்ரா கல்லூரி முதல்வர் பகல ராம்தாஸ், இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன், துணை இயக்குநர் பத்மாவதி உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெற்றது.

தொடர்ந்து அடுத்த வாரம் தேர்வுகள் முடிந்த பிறகு கலாஷேத்ரா மாணவ மாணவிகளிடம் விசாரணை நடத்தப்படும் என மனித உரிமைகள் ஆணையம் தரப்பில் இருந்து தகவல் சொல்லப்படுகிறது.