விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் கெங்கவரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 1200 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த சீரக சம்பா மற்றும் பொன்னி நெற்பயிர்கள் அறுவடைக்குத் தயாராக இருந்தன. இந்நிலையில், அந்த நெற்பயிர்கள் அனைத்தும் கடும் பனிப்பொழிவு காரணமாக திடீரென பூச்சிகள் தாக்கி சேதம் அடைந்துள்ளன.
அதைத் தொடர்ந்து, கெங்கவரம் கிராமத்தில் சாகுபடிக்குத் தயாராக இருந்த 1200 ஏக்கர் நெற்பயிர்களில் பூச்சு தாக்கியது குறித்து இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் விவசாய நிலங்களுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
விவசாயிகளிடம் இதுகுறித்து விசாரித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், “கெங்கவரம் கிராமத்தில் சுமார் 400 ஹெக்டர் அளவிற்கு சாகுபடிக்குத் தயாராக இருந்த பொன்னி மற்றும் சீரக சம்பா நெற்பயிர்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை நான் உட்பட மாவட்ட ஆட்சியர், வேளாண் துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு நடத்தினோம். நெற்பயிர்கள் வீணாகிவிட்டது என வேளாண் அலுவலர்கள் தெரிவித்தனர். ஆகையால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர தமிழக அரசிடம் வலியுறுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என உறுதி அளித்தார்.