துக்ளக் விழாவில் பேசிய ரஜினிகாந்த், சேலத்தில் பெரியார் தலைமையில் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணியில் ராமர் - சீதையின் ஆடையில்லா படங்கள் செருப்பு மாலையுடன் இடம்பெற்றதாகவும், அதனை துக்ளக் பத்திரிகை மட்டுமே தைரியமாக வெளியிட்டதாகவும் பேசினார். இந்த தகவல் தவறானது என பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்தன. இந்நிலையில் ரஜினியின் இந்த பேச்சு அமைதியை குலைக்கும் விதமாக இருப்பதாக கூறி திராவிடர் விடுதலை கழகம் சார்பில் ரஜினி மீது காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, "திராவிடர் கழகத்தினரின் மிரட்டல்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கவலைப்பட தேவையில்லை என்றும் பெரியார் குறித்து பேசிய விவகாரத்தில் ரஜினி மீது சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது" என்று தெரிவித்தார்.