நாகையில் மது அருந்துவதற்கு அனுமதிக்காத ஹோட்டல் உரிமையாளர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதோடு, கடையை அடித்து நொறுக்கி துவம்சம் செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.
நாகை செம்மரக்கடை பகுதியைச் சேர்ந்தவர் ஜாஹிர் உசேன். இவர் தோணித்துறை சாலையில் கடந்த 30 ஆண்டுகளாக ஹோட்டல் நடத்திவருகிறார். நேற்று இரவு 10 மணியளவில் கடையை மூடும் நேரத்தில் ஹோட்டலில் சாப்பிட்ட (நாகை அக்கரைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த) நிவாஸ் மற்றும் சிலம்பு ஆகியோர் ஆம்லெட் கேட்டுக்கொண்டே, இடுப்பில் மறைத்து வைத்திருந்த மதுபாட்டிலை எடுத்து கடையிலேயே திறந்து மது அருந்தியுள்ளனர். இதைப் பார்த்த கடை உரிமையாளர், ''இங்க மது குடிக்க அனுமதி இல்லை, தயவுசெய்து கிளம்புங்க'' எனக் கூறியுள்ளார். ஆனாலும் அவர்கள் வெளியேபோக மறுத்து தகராறு செய்துள்ளனர். இதனால் கடைக்காரருக்கும், மது குடிக்க வந்தவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
அங்கிருந்து புறப்பட்டுச் சென்றவர்கள் மீண்டும், தனது நண்பர்களை அழைத்துக்கொண்டு வந்து, ஹோட்டலை அடித்து நொறுக்கி துவம்சம் செய்தனர். கடை கண்ணாடி, மேசை, சிசிடிவி கேமராக்கள் என எதையும் விட்டுவைக்காமல் அடித்து நொறுக்கினர். அவர்களது அராஜகக் காட்சிகள் முழுவதும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதோடு கடை உரிமையாளர் ஜாஹிர் உசேன் மற்றும் மாஸ்டர் அப்துல்லா கான் ஆகிய இருவரையும் தாக்கியதோடு, கல்லாவில் இருந்த 12,500 ரூபாய் பணத்தையும் எடுத்துச் சென்றனர். அதோடு நிறுத்திக்கொள்ளாமல் கடை உரிமையாளரின் வீட்டிற்குச் சென்ற அந்த கும்பல் வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கினர்.
தலை, கை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டுக் காயமடைந்த கடை உரிமையாளர் ஜாஹிர் உசேன் மற்றும் மாஸ்டர் அப்துல்லா கான் ஆகியோர் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாகையில் மது அருந்த அனுமதிக்காத ஹோட்டல் உரிமையாளரை தாக்கி ஹோட்டலை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கஞ்சா போதையால் கூலித் தொழிலாளி பெண்ணை கோயிலில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் அடங்குவதற்குள், இந்தச் சம்பவம் நடந்திருப்பது நாகை பகுதியில் 'சட்டம் ஒழுங்கு' என்ன ஆனது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.