நாட்டியக் குதிரைகள் என்றால் அது புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், காசிம்புதுப்பேட்டை, தஞ்சை மாவட்டம் ஆவணம் குதிரைகள் தான் சிறப்பு வாய்ந்த வளர்ப்புகளாக உள்ளது. சினிமாவிலும் அடிக்கடி இந்த வெள்ளைக் குதிரைகள் தலை காட்டும். அந்த அளவுக்கு புகழ் பெற்றது இந்த குதிரைகள்.
இந்த குதிரைகளை தங்கள் குழந்தைகளைப் போல பராமரித்து வளர்த்து வருகிறார்கள். இஸ்லாமிய கல்யாணம் என்றால் இந்த குதிரைகள் இல்லாமல் திருமணம் இல்லை. மாப்பிளை அழைப்பு ஊர்வலம் இந்த குதிரைகளில் தான் சாரட்டு வண்டிகயில் மாப்பிள்ளை வருவார்.
அதே போல எந்த ஊரில் திருவிழா என்றாலும் நாட்டிய குதிரைகள் தாளத்திற்கு ஏற்ப நாட்டியமாடிக் கொண்டே செல்ல அதன் பின்னால் கிராம மக்கள் செல்வார்கள். அரசியல் விழாக்கள் என்றாலும் இந்த குதிரைகளின் வரவேற்று சிறப்பாக இருக்கும்.
கரோனா ஊரடங்கு இந்த குதிரைகளையும் விட்டு வைக்கவில்லை. காசிம்புதுப்பேட்டையில் இருந்து கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 2 குதிரைகள் ஊரடங்கால் அங்கேயே தவிக்கிறது. முன்பதிவுகள் அத்தனையும் ரத்து செய்யப்பட்டுவிட்டது. திருவிழாக்கள் நடக்கவில்லை. அதனால் அனைத்து முன்புதிவுகள் ரத்தாகியுள்ளன. ஒத்தை ரூபாய் வருமானம் இல்லாமல் ஒரு நாளைக்கு ரூ. 500 வரை கடன் வாங்கி செலவு செய்து குதிரைகளை பராமரித்து வருகிறார்கள்.
இது குறித்து குதிரை வளா்போர்கள் கூறும்போது, நல்ல ஜாதிக்குதிரைகளாக பார்த்து வாங்கி வந்து தாளத்திற்கு ஏற்ப நாட்டியமாடி பழக்க வேண்டும். அதற்காகவே தனி பயிற்சி வேண்டும். பழக்கிய பிறகு தான் நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வோம். மேலும் கொள்ளு, தீவனம், பச்சைப் புல் அத்தனையும் வேண்டும். ஊரடங்குக்கு முன்னர் ஏதாவது ஒரு நிகழ்ச்சி இருக்கும். அந்த வருமானத்தில் செலவு செய்தோம். ஆனால் 40 நாட்களாக எந்த வருமானமும் இல்லை. அதனால் கொள்ளு வாங்க கூட வழியில்லை. தீவனம் மூட்டைக்கு ரூ. 300 திடீரென உயர்ந்துவிட்டது. பராமரிப்பு செய்ய பலர் வேணும். அவங்களுக்கு சம்பளம் கொடுக்க வழியில்லை. அதனால் ஒவ்வொரு நாளும் கடன் வாங்கி குதிரைகளை பராமரித்து வருகிறோம். இப்பவே லட்சக்கணக்கில் கடன் வாங்க வேண்டிய நிலை வந்துவிட்டது. தீவனங்களையாவது அரசு மானியத்தில் கொடுத்தால் ஓரளவு சமாளிக்கலாம் என்றனர்.