அயனாவரத்தில் 12வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகள் மற்றும் திரைத்துறையினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தினர்.
அயனாவரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் 21 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திரைத்துறையினர் திருநங்கைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநங்கை அப்ஸரா, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனையே தீர்வாகும் என்று வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய நடிகர் கணேஷ் வெங்கட்ராமன், வீடுகள் உள்ள குடியிருப்பு பகுதிகளிலேயே இவ்வாறான குற்றங்கள் நடக்கிறது எனில் வேறு எதுதான் பெண்களுக்கு பாதுகாப்பான பகுதி என்று வினா எழுப்பினார். இந்தக் குற்றத்திற்கு நீதித்துறை காவல்துறை மற்றும் அரசாங்கம் சரியான தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
. இதையடுத்துப் பேசிய சிறுமியின் சகோதரி பிரியா, தன் தங்கை சத்தம் போட்டும் யாருமே சிறுமியை கண்டு கொள்ளவில்லை என்றார். மேலும் கத்தியை காட்டி மிரட்டி கற்பழித்து உள்ளனர் என்றும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அடுத்து பேசிய நடிகை சாக்ஷி, மதுபோதையில் இருந்த குற்றவாளிகள் திட்டமிட்டே இந்த பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்றும் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு வெளிநாட்டில் உள்ளதைப் போல மர்ம உறுப்பை துண்டிக்க வேண்டும் என்றும் மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகளுக்கு சமுதாயம் மட்டுமே பொறுப்பாகாது என்றும் பெற்றோர்களின் அறியாமையும், கவனக் குறைவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என்றும் நடிகை சாக்ஷி தெரிவித்தார்.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.