கடந்த மூன்று நாட்களாக ஈரோடு கலெக்டர் சி.கதிரவன் ஈரோடு மாநகராட்சியில் நேரடியாக களமிறங்கி நடந்தும் சைக்கிளிலும் சென்று ஒவ்வொரு வீதியாக டெங்கு கொசு உற்பத்தியாகும் அளவுக்கு தண்ணீர் தேங்கி இருக்கிறதா என்பதை நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
இதில் உடன் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் ஊழியர்களும் செல்கிறார்கள். ஈரோடு என் ஜி ஓ காலனி பகுதியில் இங்கிருந்த ஒரு மைக்ரோ பயாலஜி லேப் நிலையத்திற்குள் சென்ற கலெக்டர் அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களை ஆராய்ந்து பார்த்தார். அதில் சுகாதாரமற்ற வகையில் ஆய்வுக்கு வந்த மாதிரி பொருள்கள் இருப்பதை கண்டதோடு மேலும் தேங்கியிருந்த தண்ணீரில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதை உறுதிப்படுத்தினார். உடனே மைக்ரோ பயாலஜி லேப் உரிமையாளரிடம் சுகாதாரத்தை ஆய்வு செய்யவேண்டிய நீங்களே டெங்கு கொசுவை உற்பத்தி செய்வது சட்டப்படி தவறில்லையா எனக்கூறி ஒரு லட்சம் அபதாரம் என நோட்டீஸ் கொடுத்து வந்தார்.
அடுத்து அப்பகுதியில் இயங்கி வந்த ஒரு அசைவ உணவகத்திற்கு சென்ற கலெக்டர் அங்கு உணவு சமைப்பதில் இருந்து மக்கள் சாப்பிடும் இடம் வரை ஆராய்ந்து பார்த்ததில் டெங்கு கொசு உற்பத்தி ஆகும் அளவுக்கு சுகாதாரமற்ற முறையிலும் தண்ணீர் தேங்கி இருந்ததையும் கண்டு அந்த உணவகத்திற்கு ஒரு லட்சம் அபதாரம் விதித்ததோடு அந்த உணவகத்தை யும் பூட்டி சீல் வைத்தார். அதேபோல் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் தொட்டிகளை ஆய்வு செய்து கொசு உற்பத்தி ஆகக்கூடிய தண்ணீர் தொட்டிகளை அப்புறப்படுத்த வேண்டும் என கூறியதோடு ஆயிரம் இரண்டாயிரம் பத்தாயிரம் என அபதார தொகையை அறிவித்து வந்தார்.
மேலும் தொடர்ந்து கலெக்டர் கதிரவன் தனது ஆய்வு பணியை செய்துவருவது ஈரோடு மக்களிடம் இது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.