உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா வருகிற 22 ஆம் தேதி பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொடக்க விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மாநில அரசும், மத்திய அரசும் செய்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவன்று அனைத்து மத்திய அரசு அலுவலர்களுக்கும் அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, உத்தரப் பிரதேசம், கோவா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் பொது விடுமுறை அளித்துள்ளது. இதேபோன்று தமிழகத்திலும் ராமர் கோவில் திறப்பு விழாவின் போது பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் கோரிகை வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராமர் கோவில் திறப்பு விழா அன்று, இந்திய பங்குச்சந்தை நிறுவனங்களுக்கு அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வரும் 22 ஆம் தேதி பங்குச் சந்தைகள் அனைத்தும் காலை 9 மணிக்குப் பதிலாக மதியம் 2.30 மணிக்கு திறக்கப்பட்டு மாலை 5 மணி வரை செயல்படும் என்றும், இதனால் இன்று(20.1.2024) பங்குச் சந்தைகள் காலை 9.15 மணி முதல் 3.30 மணி வரை செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.