தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தில் அமைந்துள்ளது ஒகேனக்கல். கர்நாடகாவில் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து வரும் தண்ணீர் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதியான பிலிகுண்டுலுவுக்கு வருகிறது. அங்கிருந்து ஒகேனக்கல்லுக்கு வரும் காவிரி, காலம் காலமாக சுற்றுலா பயணிகளையும் மகிழ்வித்து வருகிறது.
ஐந்து தலை நாகம்போல தண்ணீர் சீறிப்பாயும் ஐந்தருவி, முதன்மை அருவி என சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் அருவிகளும் உண்டு. சினிமா படப்பிடிப்புகளுக்கும் பெயர் பெற்றது ஒகேனக்கல். பரிசல் பயணம், மசாஜ் மையங்கள் என சுவையான அனுபவங்களை சுற்றுலா பயணிகளுக்கு தந்து கொண்டிருந்த ஒகேனக்கல், கடந்த சில மாதங்களாக கரோனா தொற்று காரணமாக களை இழந்து இருந்தது. சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்ததே களையிழக்க காரணம்.
மேலும், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்த போதும் கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில்தான், பேருந்து போக்குவரத்தை இயக்கவும், இதர தொழில் நிறுவனங்கள் கிட்டத்தட்ட முழுமையாக செயல்படவும் அரசு அனுமதி அளித்துள்ளது. கரோனா ஊரடங்கு உத்தரவில் பெருமளவு தளர்த்தப்பட்டு உள்ள நிலையில், ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகளை நம்பியே வாழ்க்கையை ஓட்டி வரும் பரிசல் ஓட்டிகளும் கட்டுப்பாடுகளை தளர்த்த கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இது ஒருபுறம் இருக்க, ஒகேனக்கல் காவிரி கரையின் மறுபகுதியான மாறுகொட்டாய் பகுதியில் பரிசல்கள் இயக்கலாம் என அண்மையில் கர்நாடகா அரசு அனுமதி அளித்துள்ளது. இதையும் மனதில் கொண்டே, ஒகேனக்கல் பரிசல் ஓட்டிகள் இங்கேயும் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டுமென தர்மபுரி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இதையடுத்து, ஆட்சியர் மலர்விழி கடந்த செவ்வாயன்று (அக். 6) ஒகேனக்கல் காவிரி பகுதியில் நேரில் ஆய்வு செய்தார். அங்குள்ள பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாலர்கள், சமையல் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் குறித்து கேட்டறிந்தார்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அதிகமாக வெள்ளம் வந்தபோது முதன்மை அருவிகள், நடைபாதை பகுதிகளில் சேதம் அடைந்துள்ளதால் அவற்றை சீரமாக்க ஒரு வார காலம் தேவைப்படும் என்றார். இப்பணிகளை முடித்த பிறகு அக். 15- ஆம் தேதி முதல் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்றார் ஆட்சியர்.
இத்தகவலால் ஒகேனக்கல் காவிரியை நம்பி வாழும் பரிசல் ஓட்டிகள் முதல் மசாஜ் தொழிலாளர்கள், சமையல் தொழிலாளர்கள், சிறு வர்த்தகர்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.