Skip to main content

வரலாற்றுச் சிறப்பான ஆடித் தபசு திருவிழா - கொடியேற்றத்துடன் துவக்கம்!

Published on 01/08/2022 | Edited on 01/08/2022

 

கல்பகோடி காலத்திற்கு முன்பு சைவம் பெரிதா, வைணவம் பெரிதா என்று இருசமய பக்தர்களுக்கு இடையே கடுமையான போட்டி, வாக்குவாதமாகிப் பின் இரண்டு தரப்புகளும் வெட்டியும் குத்தியும் ரத்தச் சகதியில் மடிந்தனர். பக்தர்களின் இந்த 'நீயா நானா' மோதல்களையும், குருதிப் புனலையும் கண்டு பதறிய தேவாதி தேவர்கள் ஓடுகிற ரத்த ஆற்றைத் தடுக்கிற வகையில் சர்வேஸ்வரனான சிவபெருமானிடம் சென்று பதைபதைப்போடு முறையிட்டவர்கள் எம்பெருமானே தடுத்தாட்கொள்ள வேண்டும் என்று வேண்டி நின்றனர்.

 

அவர்களின் வேண்டுதலுக்கிணங்க படைக்கும் பரம்பொருளான சிவபெருமான் தன் உடம்பில் ஒருபாதியைச் சிவனாகவும், மறுபாதியை ஹரியாகவும் இணைந்த அற்புதமான அவதாரத்தோடு பூவுலகில் மோதிக்கொண்டிருந்த பக்தர்களுக்குக் காட்சியளித்தார். காணக்கிடைக்காத ஆதிசிவனின் இந்த அரிய காட்சியைக் கண்ட இருதரப்பு பக்தர்களும் மெய்மறந்து இறைவனை வணங்கி நின்றார்கள். சைவமும் வைணவமும் வெவ்வேறு அல்ல. இரண்டும் ஒன்றே. அனைத்தும் நானே என்று பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார் எம்பெருமான். அன்றுமுதல் சைவ, வைணவ விவகாரத்திற்கு ஃபுல்ஸ்டாப் விழுந்தது. இரண்டு தரப்பும் ஒற்றுமையானார்கள் என்பது நடந்த வரலாறு காலம் காலமாக வழிபடப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

 

சிவபெருமானின் இந்த ஆச்சரிய அற்புத நிகழ்வைப் பற்றி அறிந்த உமையவள், பார்வதிதேவியார், சர்வேஸ்வரனிடம், பக்தர்களுக்குத் தாங்கள் அருளிய அந்த அரிய காட்சியை அடியாளும் காணும் பாக்கியம் தந்தருள வேண்டும் என்று வணங்கி நின்றார். அந்த காட்சியைக் காணவேண்டுமென்றால் பூலோகத்தில் புன்னைவனப் பகுதியில் எம்மை நினைத்து தவம் செய்தால், யாம் காட்சி தருவோம் என்று பார்வதி அம்மையாருக்கு அருள்வாக்கு அளித்தார் எம்பெருமான்.

 

அதனைச் சிரமேற்கொண்ட பார்வதியம்மையார் ஆதிசிவனின் ஆக்ஞயைப்படி பூலோகத்தின் திருத்தலமான புன்னைவனத்தடி வந்தவர் பசுக்கள் சூழ, சிவபெருமானை நினைத்து மா தவம் மேற்கொண்டார். ஆண்டாண்டு காலம் நீடித்த உமையம்மையின் கடும் தவம் கண்டு மனமிறங்கிய சிவபெருமான் தன்பக்தர்களுக்குக் காட்சியளித்த தன் உடலில் ஒன்றாக உருவான அரியும், சிவனாகவும் ஒரு சேர அமைந்த அரிய காட்சியோடு, உன் தவம் கண்டுமெச்சினோம் எனும் திருவருளோடு பார்வதிதேவியாரின் முன்னே பெரும் தோற்றத்தோடு சிவபெருமான் தனக்கு அருளிய அந்த அற்புதக் காட்சி கண்டு மெய்சிலிர்த்த அம்மையார், அருட்காட்சியோடு ஆசீர்வதித்த சிவபெருமானை வலம் வந்து வணங்கினார்.

 

காணக்கிடைக்காத இந்த தெய்வத்திருக்காட்சி பூலோகத்தின் புன்னைவனத்தில் ஆடி மாதம் நல்பௌர்ணமி முகூர்த்தத்தில் நடந்தேறியிருக்கிறது. அந்தப் புன்னைவனப் பகுதிதான் தற்போதைய தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் நகரமாகியிருக்கிறது. தன் உடம்பில் சங்கரனாகவும் மறுபாதியில் நாராயணராகவும் சிவபெருமான் ஒருசேர உருவெடுத்து நின்றதால் சங்கரநாராயணராகி அதே திருக்கோலத்துடனும், சங்கரலிங்கமாகவும், பார்வதிதேவியார் கோ சூழ, தவமிருந்தால் கோமதியம்பிகையாகி தவத்திருக்கோலத்துடன் கூடிய ரூபத்துடன் காட்சியளிப்பது போன்ற மூன்று பெரிய சன்னதிகளைக் கொண்ட சுவாமி சங்கரநாராயணர் கோவில் என்று தமிழகத்திலேயே மூன்று பெரிய சன்னதிகளைக் கொண்ட பெரிய கோவில் நகரமானது. பின்னர் காலப் போக்கில் சங்கரன்கோவில் என்றழைக்கப்பட்டும் வருகிறது. 

 

ஆடிமாத முகூர்த்தத்தில் சர்வேஸ்வரனின் இந்த ஒருங்கே அமைந்த இருபாக காட்சிதான் ஆண்டாண்டு காலமாக ஆடித்தபசு காட்சி திருவிழா என்று பக்தர்களால் பக்தி சிரத்தையோடு கொண்டாடப்பட்டு வருகிறது என்பது வரலாறு என்கிறார்கள் ஆன்மீகப் பற்றாளர்கள். அத்தனை சிறப்பு கொண்ட ஆடித்தபசு திருவிழா சங்கரன்கோவில் நகரில் ஆடி மாதத்தில் 10 நாள் திருவிழாவாக விமர்சையாக கொண்டாடப்படும். இறுதி நாளான 10ம் திருநாளின் போது சிவபெருமான் சங்கரநாராயணராக, கோமதியம்மைக்குக் காட்சியளிப்பார். அந்த அரிய காட்சியைக் காணத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கில் திரண்டு வருகிற பக்தர்கள் பக்தி சிரத்தையோடு தரிசிப்பர்.

 

வருடம் தோறும் நடைபெற்று வந்த ஆடித்தபசு திருவிழா கரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் போனதால் இந்த வருடம் ஆடித்தபசு திருவிழா முழுவீச்சில் வேகம் எடுத்திருக்கிறது. முதல் நாளான இன்று அதிகாலை 5-6 சுபமுகூர்த்தத்தில் சுவாமி சங்கரநாராயணர் ஆலயத்தில் சுவாமி சங்கரலிங்கம், ஸ்ரீ கோமதியம்பிகைக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் ஆலய சன்னிதானத்தின் முன்பிருந்த கொடிமரம் அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு பட்டர்கள் வேதமந்திரங்கள் முழங்க பெரிய தீபாராதனையுடன் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்ட போது திரளான பக்தர்கள் தரிசித்தனர். கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆடித்தபசு திருவிழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.

 

ஆதிசிவன் காட்சி கொடுக்கிற ஆடித்தபசின் போது பக்தர்கள் மனமிறங்கி வேண்டுவது நிறைவேறும். வேளாண் மக்கள் தங்களின் விளைபொருளான பருத்தி, கடலை காய்கறி போன்ற இனங்களை அர்ச்சிப்பர். அதனால் விவசாயம் சிறக்கும் என்பது காலம் காலமாக பக்தர்களின் ஐதீகமாக இருந்திருக்கிறது. இந்தக் கொடியேற்ற நிகழ்வில் அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜ் பங்கேற்றார்.

 

 

சார்ந்த செய்திகள்