Skip to main content

தள்ளாத வயதிலும் சலிக்காத காதல்; மரணத்திலும் கணவனை பிரியாத  மனைவி 

Published on 26/04/2023 | Edited on 26/04/2023

 

His wife lost their life in the tragedy of her husband passed away

 

98 வயது கணவரின் உடல் முன்பு உட்கார்ந்து அழுதுகொண்டிருந்த மூதாட்டி ஒருவர், திடீரென கணவரின் உடலில் விழுந்து உயிர்விட்ட சம்பவம் துக்க நிகழ்வுக்கு வந்தவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

 

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 98 வயது முதியவர் முனுசாமி. இவரது மனைவி கருப்பம்மாள். இவருக்கு வயது 90. இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். இந்த தம்பதி அன்புடனும் புரிதலுடன் வாழ்ந்து வந்தனர். உறவினர்கள் வீடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகள் அனைத்திற்கும், இந்த தம்பதியர் ஒன்றாகச் சென்றுவிட்டு வீடு திரும்புவது வழக்கம். ஆனால், இருவரும் வயது முதிர்வு காரணமாக சமீபத்தில் வீட்டிலேயே முடங்கிக் கிடந்துள்ளனர். பிள்ளைகள் பராமரித்து வந்துள்ளனர்.

 

இந்நிலையில் ஏப்ரல் 21ஆம் தேதி.. நள்ளிரவு சுமார் 11 மணி அளவில், வயது முதிர்வு காரணமாக முனுசாமியின் உயிர் பிரிந்துள்ளது. ஐயா.. என்னைவிட்டு போயிட்டயே ராசா.. என விண்ணதிர கதறி அழுதுள்ளார். அவரின் அழுகையை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. இப்படியே அழுதால், கருப்பம்மாளுக்கும் எதாவது ஆகிவிடப்போகிறது என நினைத்த உறவினர்கள், அவரை ஆற்றுப்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து முனுசாமி இறந்துவிட்டதாக உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, உடல் நல்லடக்கம் நடைபெற இருந்தது.

 

கணவனை இழந்த சோகத்திலும் மன வேதனையிலும் இருந்த கருப்பம்மாள் டீ காபி கூட குடிக்க மறுத்துள்ளார். இந்நிலையில், மறுநாள் காலை சுமார் 11 மணியளவில் கணவன் உடல் அருகில் அழுது கொண்டிருந்துள்ளார் கருப்பம்மாள். திடீரென அவரது அழுகை அடங்கியுள்ளது. அழுத அசதியில் கருப்பம்மாள் ஓய்வு எடுக்கிறார் என நினைத்த பிள்ளைகள், அவரை சில நொடிகள் தொந்தரவு செய்யவில்லை. பின்னர், எழுந்திரி அம்மா.. என அவரது மகள் எழுப்பியுள்ளார்.. கருப்பம்மாள் உடலில் எந்த அசைவும் இல்லை... பதட்டமான உறவினர்கள் முகத்தில் தண்ணீர் தெளித்து பார்த்துள்ளனர். அப்போதும், கருப்பம்மாள் எந்த ரியாக்ஷனும் இல்லாமல் கிடந்துள்ளார்.

 

பின்னர், பரிசோதித்த போதுதான் தெரிந்துள்ளது, கணவன் உயிரிழந்த சோகத்தில் அழுது கொண்டிருந்துள்ள கருப்பம்மாள் கணவர் இறந்த மறுநாளே உயிரிழந்துள்ளார். இதனால், அவரது உறவினர்களும் பிள்ளைகளும் கடும் வேதனையிலும் சோகத்திலும் ஆழ்ந்தனர். ஏற்கனவே தந்தையை இழந்து தவித்தவர்களுக்கு தாயின் மரணம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, இருவரின் உடல்களும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. எங்க போனாலும் அம்மாவை கூப்பிட்டு போனீங்களே அப்பா.. இப்ப அம்மாவையும் கூட்டிட்டு போயிட்டீங்களே.. என பிள்ளைகள் கதறியது கூடியிருந்தவர்களையும் கலங்கவைத்துள்ளது.

 

முதிர்ந்த வயதிலும் கணவனை பிரியாமல் வாழ்ந்து வந்த மனைவி, கணவன் இறந்த 12 மணி நேரத்தில் தானும் இறந்திருப்பது கிராமத்து மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்