டெங்கு காய்ச்சல் இந்த ஆண்டு அக்டோபர் வரை, தமிழகத்தில், 4,779 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, நான்கு பேர் இறந்துள்ளனர். நாடு முழுவதும், 91 ஆயிரத்து, 457 பேர் பாதிக்கப்பட்டு, 82 பேர் உயிரிழந்துள்ளனர்; அதிகபட்சமாக, கேரளாவில், 16 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும், 2018ல், 1.02 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 172 பேர் உயிரிழந்த நிலையில், இந்தாண்டு உயிரிழப்பு குறைந்துள்ளதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் டெங்கு தொற்று நோய் மிக வேகமாக பரவி வரும் நிலையில் டெங்கு நோய் தடுக்க, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. திருச்சி நீதிமன்ற வழக்கறிஞர்கள் பெரும்பாலானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மணப்பாறை வழக்கறிஞர் அப்பாசாமியின் மனைவி வழக்கறிஞர் ஜெயலெட்சுமி என்பவர் டெங்கு காய்ச்சலால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் டெங்குவை தடுக்க, விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க செயலர் வெங்கட் தலைமை வகித்தார். குற்றவியல் நீதிமன்ற நீதித்துறை நடுவர்கள் கார்த்திக் ஆசாத், திருவேணி, சோமசுந்தரம், குமார், பாலகிருஷ்ணன், ஷகிலா, மணிவாசகம் உள்ளிட்டோர்கள் பங்கேற்றார்கள். மழைக்காலங்களில் வீட்டைச் சுற்றி நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதிலும் டயர் ,தேங்காய் சிரட்டை, பிளாஸ்டிக் டப்பாக்கள் உள்ளிட்டவற்றில் தேங்கும் மழை நீரில் ஏடிஸ் வகை கொசுக்கள் இனப்பெருக்கம் செய்து டெங்கு காய்ச்சலை பரப்புகின்றன. இதனால் உடலில் தட்டணுக்கள் குறைந்து விடும். ஆகையினால் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் நிலவேம்பு கசாயம் பருகவேண்டும்.
நிலவேம்பு கசாயம் என்பது நிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம், கோரைக்கிழங்கு (கோரைப்புல்லின் கிழங்கு), பேய்ப்புடல் (புடலங்காய் வகைத் தாவரம்), பற்படாகம் (ஒரு புல் வகையைச் சேர்ந்தது), சுக்கு, மிளகு ஆகியவற்றின் மிக சரியான விகிதத்தில் தயாரிக்கப்படும் கலவையே நிலவேம்புக் குடிநீர் அல்லது நிலவேம்பு கசாயமாகும்.

நிலவேம்பு குடிநீர் அல்லது கசாயம் பருகுவதால்:
உடலில் ஏற்பட்டிருக்கும் பலவீனங்கள் நீங்கி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி ஆரோக்கியத்தை கொடுக்கிறது. எனவே மருத்துவர்களின் அறிவுறுத்தல்படி நிலவேம்பு கசாயத்தை பருகி வந்தால், டெங்கு பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதோடு, ஏற்கனவே டெங்கு ஜுரம் பாதித்திருந்தாலும் அதிலிருந்து விரைவாக குணம் பெறலாம், பப்பாளி இலைச்சாறும் அருந்தலாம் என எடுத்துக் கூறப்பட்டது.

ஆயுசு நூறு ஆயுர்வேதம் சித்தா ஆலயம் வழங்கிய நிலவேம்பு குடிநீரினை வழக்கறிஞர்கள், பணியாளர்கள் உட்பட பலருக்கும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திர குமார், திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க துணைத் தலைவர் பிரபு, செந்தில்நாதன், இணைச் செயலர் ஜானகிராமன், பொருளாளர் வடிவேல், மூத்த வழக்கறிஞர் ஸ்தனிஸ்தலஸ், சித்ரா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.