அமெரிக்கா சென்றிருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை சென்னை திரும்பினார். அவருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன் பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “மக்களுக்கு திமுக மீது கோபம் வரும்போது, திமுகவிற்கு அவப்பெயர் ஏற்படும்போது இந்தி என்ற விசயத்தை அவர்கள் கையில் எடுப்பார்கள். இது புதிது கிடையாது. 70 ஆண்டுகளாக தமிழக மக்கள் பார்த்துக்கொண்டு தான் உள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு, முன்பு தமிழகத்தில் பாஜக கிடையாது என்று மு.க.ஸ்டாலின் பேசினார். ஆனால் சமீபத்தில் திமுக பொதுக்குழுவில், பாஜக தான் திமுகவின் முதல் எதிரி என்று பேசியிருக்கிறார். இதைப் பார்க்கும்போது தமிழகத்தில் பாஜக எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்பது நமக்கு தெரிகிறது.
என்னிடம், வி.பி.துரைசாமி, சக்கரவர்த்தி போன்றோர் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பாஜகவைப் பற்றியே அவர் பேச்சு இருந்தது என்று கூறினர். அப்படி என்றால் எந்த அளவுக்கு பயம் தொற்றி இருக்கிறது. முதலமைச்சருக்கு இரண்டு விதமான பயம் வந்திருக்கிறது. ஒன்று அவரது கட்சியில் யார் என்ன செய்வார்கள், எப்போது செய்வார்கள், எப்படிச் செய்வார்கள் என்ற பயம். இன்னொரு பயம் பாஜகவின் வளர்ச்சி.
அமெரிக்கா சென்ற பின் பல நிகழ்வுகள் நடந்திருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் யார் இந்து என்பதை கண்டுபிடிப்பது தான் பெரும் சர்ச்சையாக இருக்கிறது. முக்கியமான விஷயங்களை விட்டு விட்டு மக்களை எப்படி எல்லாம் திசை திருப்ப வேண்டுமோ அதைச் செய்து கொண்டு இருக்கிறார்கள். ஒரு பக்கம் குடும்ப ஆட்சியை மறைப்பதற்காக ஏதேதோ விஷயத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். யார் இந்து? யார் இந்து இல்லை? இந்தி மொழியைத் திணிக்கிறார்கள் அது இது என்று” எனக் கூறியுள்ளார்.