நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் பணியிடத்தை, கல்வித்துறையில் கொண்டு வந்ததைப் போல், ஐ.ஏ.எஸ். நிலைக்கு மாற்ற பட்டயப் பொறியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெடுஞ்சாலைத் துறையில் உதவிப் பொறியாளர்/இளநிலைப் பொறியாளர் பணியிடம் 75% / 25% என்ற அடிப்படையில் பணிபுரிய வேண்டும். அதுபோல், உதவி கோட்ட பொறியாளர் பதவி உயர்வு, 3:1 என்ற அடிப்படையில் வழங்க வேண்டும். பதவி உயர்வு தகுதிக்கு இருவருக்கும் 5 வருடம் அனுபவம் இருக்க வேண்டும்.
தற்போது நெடுஞ்சாலைத்துறையில், இளநிலைப் பொறியாளர்கள் சுமார் 275 பேர் பணியாற்றி வர வேண்டும். ஆனால், 150-க்கும் குறைவாகத்தான் பணியாற்றி வருகிறார்கள். மேலும், உதவி கோட்ட பொறியாளர் பதவி உயர்வு பெறுவதற்கு இளநிலை பொறியாளர்களுக்கு மட்டும் பணி அனுபவம் ஐந்து வருடம் என்றிருந்தது, பத்து வருடங்கள் என விதி திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒரே வேலையைச் செய்யக் கூடிய இளநிலை பொறியாளர்களுக்கும், உதவி பொறியாளர் களுக்கும் பதவி உயர்வில் ஏன் இந்த பாகுபாடு? எதிர்காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டிப்ளமோ பொறியாளர்கள் பணியிடங்களை ஒழிக்கும் நடவடிக்கையைத் தொடர்ந்து எடுத்துவரக்கூடிய பரிந்துரை, முதன்மை இயக்குநரால் செய்யப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
முதன்மை இயக்குநர் பணியிடம், பட்ட பொறியாளர்கள் தகுதி நிலையில் உள்ள பணியிடமாக இருந்து வருகிறது. எனவே 2010-ல் இருந்து, தொடர்ந்து வரக்கூடிய நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர்கள், பட்டய பொறியாளர்களை பாதிக்கும் நடவடிக்கையை அரசுக்கு பரிந்துரை செய்து வருகிறார்கள்.
எனவே, பட்டய பொறியாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முதன்மை இயக்குனர் பணியிடத்தை கல்வித்துறையில் கொண்டு வந்ததுபோல் ஐ.ஏ.எஸ். நிலைக்கு மாற்ற வேண்டும். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர்கள் சங்கத்தின் சார்பில் பொதுச்செயலாளர் மு.மாரிமுத்து இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.